தங்கம் கடத்திய வழக்கில் சசிதரூர் உதவியாளர் கைது!


சசிதரூர்

டெல்லி விமான நிலையத்தில் தங்கம் கடத்தல் வழக்கில் காங்கிரஸ் எம்பி- சசிதரூரின் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டெல்லி விமான நிலையத்தில் நேற்று, 500 கிராம் தங்கம் கடத்தியதாகக் கூறி இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சிவகுமார் பிரசாத் என்ற காங்கிரஸ் எம்பி- சசி தரூரின் தனிப்பட்ட உதவியாளர் என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக சசிதரூர் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பிரச்சாரத்துக்காக நான் தர்மசாலாவில் இருக்கும்போது, விமான நிலைய வசதி உதவியின் அடிப்படையில் எனக்கு பகுதிநேர சேவையை வழங்கி வரும் எனது முன்னாள் ஊழியர் சம்பந்தப்பட்ட ஒரு சம்பவத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.

எந்தவொரு குற்றச் செயலையும் நான் மன்னிக்கவில்லை. மேலும் இந்த விஷயத்தை விசாரிக்கத் தேவையான எந்த நடவடிக்கையையும் எடுக்க அதிகாரிகளின் முயற்சிகளுக்கு முழு ஆதரவு அளிக்கிறேன். சட்டம் அதன் நடவடிக்கையை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

துபாயிலிருந்து வந்த ஒரு பயணியை வரவேற்க டெல்லி விமான நிலையத்தில் சிவகுமார் பிரசாத் இருந்தார். அப்போது அந்த பயணி தங்கத்தை சிவகுமார் பிரசாத்திடம் ஒப்படைக்கும் போது இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சியை தங்கக் கடத்தல்காரர்களின் கூட்டணி என பாஜக சசி தரூரை கடுமையாக விமர்சித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், "முதலில் முதல்வரின் செயலாளர் தங்கம் கடத்தலில் ஈடுபட்டார்.

சசிதரூர், ராஜீவ் சந்திரசேகர்

இப்போது காங்கிரஸ் எம்பி-யின் உதவியாளர் தங்கம் கடத்தியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - காங்கிரஸ் (இந்தியா கூட்டணி கட்சிகள்) கூட்டணி தங்க கடத்தல்காரரின் கூட்டணி" என குறிப்பிட்டுள்ளார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதியில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரும், காங்கிரஸ் சார்பில் சசிதரூரும் போட்டியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

x