சஞ்சு டெக்கி என்ற கேரள யூடியூபர் ஓடும் காரில் நீச்சல்குளம் உருவாக்கி அதில் கொட்டமடித்ததற்காக அரசின் தீவிர நடவடிக்கைகளுக்கு ஆளாகியுள்ளார். அதே வேளையில் சஞ்சு எதிர்பார்த்தவாறு அவரது யூடியூப் சேனல் உலகளவில் பிரபலமாகி உள்ளது.
மலையாளத்தின் பிரபலமான யூடியூபர்களில் ஒருவர் சஞ்சு டெக்கி. தனது வீடியோக்கள் அதிக பார்வைகளை பெற வேண்டும், அதன் மூலம் சப்ஸ்கிரைபர்களின் எண்ணிக்கை கூட வேண்டும் என விரும்பும் யூடியூபர்களில் சஞ்சுவும் ஒருவர். அதற்காக ஏடாகூடமான செயல்களில் ஈடுபடவும் தயங்காதவர். அப்படி ஓடும் காரில் நீச்சல்குளம் உருவாக்கி, அதில் நண்பர்களுடன் கொட்டமடித்ததில் அரசு அதிகாரிகளின் பல்வேறு அதிரடிகளுக்கு ஆளாகி உள்ளார்.
ஃபகத் ஃபாசில் நடிப்பில் அண்மையில் வெளியான ’ஆவேசம்’ திரைப்படத்தின் பாதிப்பில், தனது காரினுள் நீச்சல்குளம் அமைப்பை உருவாக்க சஞ்சு முடிவு செய்தார். அதற்காக 25 லட்ச ரூபாய் மதிப்பிலான தனது காரின் உட்புறத்தை முழுவதுமாக மாற்றினார். தார்பாலின் கொண்டு தற்காலிகமாக நீச்சல்குளம் ஒன்றை உருவாக்கினார். பின்னர் நெடுஞ்சாலையில் கார் விரைய, அதனுள் நண்பர்களுடன் இணைந்து கொட்டமடித்தார். நீச்சல்குளத்தில் நீந்தியபடியும், இளநீர் அருந்தியபடியும் தங்களது ரசனையான அனுபவத்தை வீடியோவாக்கினார்கள்.
இந்த வீடியோ வெளியானதுமே சஞ்சு எதிர்ப்பார்த்த வகையில் வைரலானது. ஆனால் அவர் எதிர்பாராத வகையில், மோட்டார் வாகனத்துறையின் நடவடிக்கைக்கும் ஆளானது. பல்வேறு போக்குவரத்து விதிகளை மீறியதற்காக மோட்டார் வாகனத் துறை அதிகாரிகள், சஞ்சுவின் காரின் பதிவுச் சான்றிதழை நிறுத்தி வைப்பதாக அறிவித்தனர்.
பரபரப்பான சாலையின் வாயிலாக கார் விரையும்போது, இடையில், நீச்சல்குளத்திலிருந்த தண்ணீர் என்ஜினுக்குள் புகுந்ததில் களேபரமானார்கள். உடனே நடுவழியில் நிறுத்தி தண்ணீரை, சாலையில் பிற வாகனங்களுக்கு இடைஞ்சலாகும் வகையில் அபாயகரமாக வெளியேற்றினார்கள். இதனால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்துத் தடையும் ஏற்பட்டது. இந்த வீடியோவுக்கு எதிராக பரவலான விமர்சனங்கள் வந்ததில், மோட்டார் வாகனத் துறை சஞ்சுவுக்கு முதலில் சம்மன் அனுப்பியது.
அதைத் தொடர்ந்து இன்றைய தினம் அவர் சாலை போக்குவரத்து அதிகாரிகளின் விசாரணைக்கு ஆஜரானார். விசாரணையின் முடிவில் தண்டனையாக, சஞ்சு மற்றும் வாகனத்தில் கொட்டமடித்த அவரின் மூன்று நண்பர்களுக்கும் அங்குள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரு வாரம் சமூக சேவை செய்யுமாறும், துறையின் பயிற்சித் திட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டது. மேலும், காரை ஓட்டிச் சென்றவரின் உரிமம் ஓராண்டுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனபோதும், தனது வீடியோவும் சேனலும் கேரளா மற்றும் இந்தியாவுக்கு வெளியேயும் பரவலானதில், சஞ்சு டெக்கி உற்சாகமாகவே இருக்கிறார்.
இதையும் வாசிக்கலாமே...
நாளை குமரியில் மோடியின் தியான நிகழ்ச்சி நடக்குமா?!காங்கிரஸ் கட்சியால் பெரும் பரபரப்பு!
பெண்களே உஷார்... மளிகை கடையில் பொருள் வாங்குவது போல் வந்து நகையை பறித்துச் சென்ற இளைஞர்
பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரி வருகை... கடலோர காவல்படை கப்பல்கள் தீவிர ரோந்துப்பணி
பகீர்... அரசு பள்ளிக்குள் மாணவிக்கு நடந்த அக்கிரமம்: கர்ப்பமாக்கிய தலைமை ஆசிரியர் கைது!
பிரஜ்வல் ரேவண்ணா வீட்டில் எஸ்ஐடி விடிய விடிய சோதனை... கட்டில், தலையணைகள் பறிமுதல்!