மகாத்மா காந்தி குறித்தான கருத்து... மோடியின் பட்டப்படிப்பை கிண்டலடித்த ராகுல் காந்தி


ராகுல் காந்தி - பிரதமர் மோடி

’காந்தி’ திரைப்படம் வெளியாகும் வரை மகாத்மா காந்தியை உலகம் அறிந்திருக்கவில்லை என்ற மோடியின் பேட்டியை அடுத்து, காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கடுமையாக எதிர்வினையாற்றி வருகிறார்கள். அதில் ராகுல் காந்தியும் இணைந்திருக்கிறார்.

ரிச்சர்ட் அட்டன்பரோவின் 1982-ம் ஆண்டின் மகாத்மா காந்தி வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான ’காந்தி’ வெளியாகும் வரை, மகாத்மா காந்தியைப் பற்றி உலகம் அறிந்திருக்கவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கருத்து பகிர்ந்திருந்தார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, இன்று வெளியான பேட்டி ஒன்றில் மோடியின் இக்கருத்து சர்ச்சைக்கு ஆளானது. இதற்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் பலரும் தீவிரமாக எதிர்வினையாற்றி வருவதன் மத்தியில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தன் பாணியில் கிண்டலடித்து உள்ளார்.

மோடி - மகாத்மா காந்தி சிலை

எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு ஒன்றில் “மகாத்மா காந்தியைப் பற்றி அறிய, அவரைப் பற்றிய திரைப்படத்தை ஒரு ’முழு அரசியல் அறிவியல்’ மாணவர் பார்த்தாக வேண்டி இருக்கிறது” என்றார். ’என்டயர் பொலிடிக்கல் சயின்ஸ்’ என்பது, மோடியின் முதுகலை பட்டப்படிப்பாகும். பிரதமர் மோடியின் பட்டப்படிப்புகள் குறித்து அர்விந்த் கேஜ்ரிவால் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்த சர்ச்சையை மீண்டும் கையிலெடுத்த ராகுல் காந்தி, மோடியை வெளிப்படையாகக் கிண்டல் செய்துள்ளார்.

தொலைக்காட்சி செய்தி சேனல் ஒன்றுக்கு மோடி அளித்த பேட்டியில், "மகாத்மா காந்தி உலகின் மிகப்பெரும் ஆன்மா. இந்த 75 ஆண்டுகளில், மகாத்மா காந்தியைப் பற்றி உலகிற்கு தெரிவிக்க வேண்டியது நம் பொறுப்பு அல்லவா? ஆனால் அவரைப் பற்றி யாருக்கும் தெரியாது. மன்னிக்கவும், 'காந்தி' படம் வெளியான பின்னரே முதல் முறையாக அவரைப் பற்றிய ஆர்வம் உலகில் எழுந்தது" என்று பிரதமர் பேட்டியின் போது கூறினார்.

“மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலாவை உலகம் அறிந்திருக்கின்றன. காந்தி அவர்களை விட குறைந்தவர் அல்ல. அதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். உலகம் முழுவதும் பயணம் செய்த பிறகு இதைச் சொல்கிறேன்” என்றும் அந்தப் பேட்டியில் மோடி கூறியிருந்தார். இதற்கு எதிர்வினையாக அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை எழுந்தது. குறிப்பாக காங்கிரஸ் கட்சியினர் பிரதமர் மோடியை கடுமையாக தாக்கினர்.

காந்தி திரைப்படத்தில் பென் கிங்ஸ்லி

இந்த வகையில் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பவன் கேரா, மோடியை கடுமையாக தாக்கினார். “நல்லவேளையாக மோடி பிரதமராவதற்கு முன்னரே, உலகம் முழுவதும் டஜன் கணக்கான நாடுகளில் மகாத்மா காந்தியின் சிலைகள் நிறுவப்பட்டு விட்டன. இல்லையெனில் மோடிக்கு பென் கிங்ஸ்லி சிலைகள் மட்டுமே கிடைத்திருக்கும்” என்று பகடி செய்தார். 1982ம் ஆண்டின் ’காந்தி’ திரைப்படத்தில் பென் கிங்ஸ்லி மகாத்மா காந்தியாக நடித்திருந்தார்.

இந்த வரிசையில் இணைந்த காங்கிரஸ் பொதுச்செயலர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ், “மகாத்மா காந்தியின் புகழை, பதவியிலிருந்து விடைபெறும் பிரதமர் தகர்த்திருக்கிறார். இவரது அரசுதான் வாராணசி, டெல்லி, அகமதாபாத் ஆகிய இடங்களின் காந்திய நிறுவனங்களை அழித்தது” என்று சாடியுள்ளார். இதனைத் தொடர்ந்து மேற்கண்டவாறு ராகுல் காந்தியும் இணைந்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

நாளை குமரியில் மோடியின் தியான நிகழ்ச்சி நடக்குமா?!காங்கிரஸ் கட்சியால் பெரும் பரபரப்பு!

பெண்களே உஷார்... மளிகை கடையில் பொருள் வாங்குவது போல் வந்து நகையை பறித்துச் சென்ற இளைஞர்

x