டிரைவிங் லைசன்ஸ் முதல் எரிவாயு சிலிண்டர் விலை வரை... ஜூன் மாதத்தில் அமலாகும் அதிரடி மாற்றங்கள்!


எரிவாயு சிலிண்டர்

சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகத்தின் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான புதிய விதிகள் முதல் எரிவாயு சிலிண்டர்களின் விலையில் மாற்றம் வரை பல முக்கியமானவை ஜூன் மாதத்தில் அரங்கேற உள்ளன.

அரசு தரப்பில் மக்கள் அறிந்தாக வேண்டிய புதிய அறிவிப்புக்கள், மாற்றங்கள் மற்றும் திருத்தங்கள் மாதம் தோறும் அறிவிப்பாகி வருகின்றன. அந்த வகையில் ஜூன் மாதத்தின் பிறப்பும் சில மாற்றங்களை வரவேற்கத் தயாராகி வருகிறது. அவற்றில் சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகத்தின் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான புதிய விதிகள் மற்றும் எல்பிஜி கேஸ் சிலிண்டர்களின் விலையில் மாற்றம் போன்றவை முக்கிய இடம் பிடித்துள்ளன.

ஓட்டுநர் உரிமம் (கோப்பு படம்)

ஜூன் மாதம் முதல் ஓட்டுநர் உரிமத்தைப் பெறுவதற்கான செயல்முறை சில மாற்றங்களுக்கு உள்ளாகும். ஏனெனில் சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகம் விண்ணப்பதாரர்களுக்கு தனியார் பயிற்சி மையங்களில் ஓட்டுநர் சோதனைகளை எடுப்பதற்கான விருப்பத்தை வழங்கியுள்ளது. இவற்றுக்கு அரசாங்கம் சான்றளிக்கும்.

ஆதார் அட்டையைப் புதுப்பித்தல் மற்றும் திருத்தம் செய்வதற்கு ஜூன் 14 வரை அவகாசம் அளிக்கப்படுகிறது. மக்கள் தங்கள் ஆதார் விவரங்களை ஆன்லைனில் மாற்றலாம் அல்லது அருகிலுள்ள பொது சேவை மையத்தை நாடி அவற்றைப் பெறலாம்.

18 வ்யதுக்கு குறைவானவர்கள் இருசக்கர வாகனம் ஓட்டினால் அபராதமாக ரூ25 ஆயிரம் விதிக்கப்படும். மேலும் வாகனத்தின் ஆர்.சி பறிமுதல் செய்யப்படுவதோடு, குறிப்பிட்ட சிறாருக்கு அவரது 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட மாட்டாது.

வங்கி விடுமுறைகளின் பட்டியல் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடக் கூடும். குறிப்பாக பிராந்திய வங்கிகளுக்கு இந்த மாறுபாடு அதிகம் இருக்கும். ஆனால் வங்கி உதவிகளை நாடுவதில், அனைவரும் அறிந்திருக்க வேண்டிய பொதுவான விடுமுறை பட்டியலை அறிந்திருப்பது நலம். வழக்கமான இரண்டாவது, நான்காவது சனிக்கிழமைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் உட்பட பத்து வங்கி விடுமுறைகள் ஜூனில் வருகின்றன. மேலும், ஜூன் 17 ஈத்-உல்-அதா மற்றும் ஜூன் 14 ராஜ சங்கராந்தி ஆகிய தினங்களில் கூடுதலாக வங்கி மூடப்பட்டிருக்கும்.

வங்கி விடுமுறை

தேர்தல் முடிந்ததும் பெட்ரோல், டீசல் எரிபொருட்கள் மற்றும் எரிவாயு சிலிண்டரின் விலை எப்போது வேண்டுமானாலும் எகிறக் கூடும் என்ற அச்சத்தில் பொதுஜனம் தவித்து வருகிறது. இவற்றில் ஆச்சரியத்துக்கு உரிய வகையில், ஜூன் மாதத்தில் எரிவாயு சிலிண்டர்கள் விலை குறைய வாய்ப்புள்ளதாக தகவ்கள் தெரிவிக்கின்றன.

தகுதியான குடும்பங்களுக்கு மானியம் வழங்கும் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த விலைக்குறைப்பு அமைய உள்ளது. மற்றபடி இதர வணிகம் மற்றும் வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் எரிவாயு விலையில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை.

இதையும் வாசிக்கலாமே...

நாளை குமரியில் மோடியின் தியான நிகழ்ச்சி நடக்குமா?!காங்கிரஸ் கட்சியால் பெரும் பரபரப்பு!

x