அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்த மாணவியைப் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், சிக்கபள்ளாப்பூர் மாவட்டம், சிட்லகட்டா கிராமத்தில் அரசு பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 7-ம் வகுப்பு படித்த மாணவி தான் தற்போது மூன்று மாத கர்ப்பிணியாக உள்ளார். கடந்த 5 மாதங்களாக அந்த மாணவிக்கு, மாதவிடாய் பிரச்சினை இருந்துள்ளது. இதனால் அந்த மாணவியை பெற்றோர் மருத்துவரிடம் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது தான், அந்த மாணவி மூன்று மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.
இது தொடர்பாக சிறுமியிடம், அவரது பெற்றோர் விசாரித்தனர். அப்போது பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜி.வெங்கடேஷன், கடந்த சில மாங்களாகவே பள்ளி அலுவலக அறையில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து வந்தது தெரிய வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவியை அவர் மிரட்டியதும் விசாரணையில் தெரிய வந்தது. இதன் காரணமாகவே மாணவி கர்ப்பம் அடைந்ததும் தெரிய வந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக சிட்லகட்டா ஊரக காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் செய்தனர். இதன் பேரில், தலைமை ஆசிரியர் வெங்கடேஷன் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அத்துடன், அவரை நேற்று கைது செய்தனர்.
பலாத்காரம் செய்யப்பட்ட மாணவியை மீட்டு மகளிர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அரசு பள்ளிக்குள் மாணவியை தலைமை ஆசிரியர் பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் தற்போது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.