66 நர்சிங் கல்லூரிகளுக்கு மூடுவிழா... மோசடி புகார்களை அடுத்து ம.பி. முதல்வர் அதிரடி!


நர்சிங் கல்லூரி மாணவியர் - மாதிரி படம்

நீதிமன்ற உத்தரவை அடுத்து, மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் 31 மாவட்டங்களில் அமைந்திருக்கும் 66 நர்சிங் கல்லூரிகளை உடனடியாக மூடுமாறு முதல்வர் மோகன் யாதவ் இன்று உத்தரவு பிறப்பித்தார்.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத பல நர்சிங் கல்லூரிகளின் முறைகேடுகள் தொடர்பான புகார்களை சிபிஐ விசாரித்து வருவதன் பின்னணியில், மாநில முதல்வரின் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த 66 கல்லூரிகளில் சில, செயல்பாட்டில் இல்லாதவை மற்றும் காகிதங்களில் மட்டுமே உள்ளவை என்ற அதிர்ச்சி தகவலும் வெளிப்பட்டுள்ளது.

மபி முதல்வர் மோகன் யாதவ்

இந்த நர்சிங் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் எவரும் பாதிக்கப்படாமல் இருக்கவும், அவர்கள் தேர்வெழுத ஏற்பாடு செய்யவும் துறை அதிகாரிகளுக்கு ம.பி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மருத்துவக் கல்வித் துறை ஆணையர் அலுவலகம், இந்தக் கல்லூரிகளின் பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பி, உயர் நீதிமன்றத்தின் உத்தரவினை செயல்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த கல்லூரிகளின் அங்கீகாரம் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இதுபோன்ற கல்லூரிகளுக்கு எதிராக பலவகையிலான சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. "சிபிஐ மற்றும் ஊழல் தடுப்புப் பணியகம், ஏழு முக்கிய குழுக்களையும், மூன்று முதல் நான்கு துணைக் குழுக்களையும் அமைத்துள்ளனர்" என சிபிஐ செய்தித் தொடர்பாளர் முன்பு கூறியிருந்தார்.

சிபிஐ விசாரணை

மத்திய பிரதேச நர்சிங் கல்லூரி விவகாரம் சிபிஐ விசாரணைக்கும் கரும்புள்ளியானது. செவிலியர் கல்லூரி ஊழல் வழக்கு தொடர்பான சிபிஐ விசாரணையில், சாதகமான அறிக்கைகளை வழங்குவதற்காக ஒவ்வொரு நிறுவனத்திடமிருந்தும் ரூ.2 முதல் ரூ.10 லட்சம் வரை வசூலித்ததாக, சிபிஐ இன்ஸ்பெக்டராக இருந்த ராகுல் ராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார்.

நர்சிங் கல்லூரி முதல்வர் ஒருவரிடம் இருந்து ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கியதில் ஆதாரபூர்வமாக அவர் வளைக்கப்பட்டார். பின்னர் அவரை பணி நீக்கம் செய்து சிபிஐ உத்தரவிட்டது. இந்த பின்னணியில், விசாரணை வளையத்தில் இருக்கும் அனைத்து செவிலியர் கல்லூரிகளையும் மூடுமாறு தற்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

x