டெல்லி, பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு கடுமையான வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேற்கண்ட மாநிலங்களுடன் சண்டிகர், மேற்கு உத்தரபிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களுக்கும் சேர்த்து நேற்று அதிக வெப்ப அலை குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதன் காரணமாக அனைத்து வயதினருக்கும் வெப்ப நோய் மற்றும் வெப்ப வாதம் ஏற்படுவதற்கான மிக அதிக வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
ராஜஸ்தானில் உள்ள பலோடியில் நாட்டிலேயே அதிக வெப்பமான இடமாகவும், அதிகபட்சமாக 49.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை தொடர்ந்து இரண்டாவது நாளாக பதிவாகியுள்ளதாக பிடிஐ செய்தி தகவல் தெரிவிக்கிறது.
சமவெளி பகுதிகள் மட்டுமின்றி, ஹிமாச்சலப் பிரதேசத்தின் மலை பகுதிகள் கூட கடுமையான வெப்ப நிலையை எதிர்கொண்டன. சிம்லாவில் நேற்று 30.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இது இந்த சீசனின் அப்பிரதேசத்தின் அதிகபட்ச வெப்ப நிலையாகும்.
டெல்லியில் குறைந்தபட்சம் 8 இடங்களில் அதிக வெப்பநிலை (46 டிகிரி செல்சியஸுக்கு மேல்) பதிவானது. தொடர்ந்து 3 ஆண்டுகளாக கடுமையான வெப்ப அலைகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக சுகாதாரம், நீர்வளம், விவசாயம், மின் உற்பத்தி மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகள் பாதிப்பை சந்திக்கின்றன.
வெப்ப அலை காரணமாக வெப்ப வாதம் ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. நிகழாண்டில் ராஜஸ்தானில் இதுவரை 12 பேரும், கேரளாவில் 5 பேரும், தமிழகத்திலும் சில உயிரிழப்புகள் என நாடு முழுவதுமே பரவலாக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. எனவே, வெப்ப தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என பல்வேறு மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன.