கன்னியாகுமரிக்கு மே 30-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையொட்டி பாதுகாப்பு பணிகளைப் பலப்படுத்தும் பணிகளில் போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்து வருகிறது. ஆறாம் கட்ட மக்களவைத் தேர்தலுடன் ஒடிசா மாநிலத்தில் உள்ள 42 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்த நிலையில் இறுதிக்கட்டமாக ஏழாம் கட்டத் தேர்தல் வரும் ஜூன் 1-ம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து தேர்தல் முடிவுகள் ஜூன் -ம் தேதி வெளியாக உள்ளன.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வரும் 30-ம் தேதி கன்னியாகுமரி வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் இருந்து விமானத்தில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் வரும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு வருகிறார்.
பின்னர் படகு மூலம் கடல் நடுவே உள்ள விவேகானந்தர் பாறைக்குச் செல்லும் பிரதமர் மோடி, அன்று மாலை முதல் ஜூன் 1-ம் தேதி வரை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொள்கிறார். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.