‘மாடுகளை சாலைகளில் திரிய விட்டால் தென்காசி கோசாலை தான்’ - மதுரை மாநகராட்சி அதிரடி


மதுரை: மதுரை மாநகர சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாகவும், விபத்து ஏற்படுத்தியும் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து, மாவட்டம் விட்டு மாவட்டம் கடத்தி கோசாலைகளில் நிரந்தரமாக பராமரிக்க மாநகராட்சி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மாநகராட்சியின் இந்த அதிரடி நடவடிக்கையால் மாடுகளை சாலைகளில் உலாவவிடும் அதன் உரிமையாளர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

மதுரை மாநகர சாலைகளில் பயணிப்பது தற்போது வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் சவாலாக உள்ளது. மீனாட்சியம்மன் கோயிலை மையமாக கொண்டு, 3,500 ஆண்டுகளுக்கு முன்பே உருவான உலகின் பழமையான நகரங்களில் ஒன்றான மதுரை மாநகரில் சாலைகள் மிக குறுகலாக உள்ளன. அதனால், நகரச் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் நிரந்தரமாகிவிட்டதால் சாலைகளில் மக்கள், வாகன ஓட்டிகள் பயணிக்கும் நேரமும், சாலைகளை கடக்க போக்குவரத்து சிக்னல்களில் காத்திருக்கும் நேரமும் அதிகரித்துவிட்டது. தற்போது மாடுகள், சாலைகளில் கூட்டம், கூட்டமாக சுற்றிதிரிவதோடு படுத்து ஒய்வெடுப்பதோடு நிற்காமல் திடீரென்று வாகனங்கள் குறுக்கே பாய்ந்து விடுகின்றன.

அதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு விபத்துகளையும் ஏற்படுத்தி வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. கோரிப்பாளையம், அழகர் கோயில் சாலை, நத்தம் சாலை, செல்லூர் சாலை, சிம்மக்கல் சாலை, காளவாசல் சாலை, கே.புதூர் மற்றும் மாட்டுத் தாவணி போன்ற இடங்களில் மாடுகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துவிட்டது.

மாநகராக மதுரை அறியப்பட்டாலும், இன்னும் பெரிய கிராமமாகவே உள்ளதால் வைகை ஆற்றை ஓட்டிய குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் மக்கள், இன்னும் கால்நடைகளை வளர்க்கின்றனர். குறிப்பாக பசு மாடுகள் ஏராளம் வளர்க்கிறார்கள். காலை, மாலை நேரங்களில் பால் கறந்துவிட்டு, அவற்றை அருகில் உள்ள வைகை ஆற்றங்கரைகளில் மேய்வதற்கு அவிழ்த்து விடுகின்றனர்.

அந்த மாடுகள், அப்படியே தீவனம் சாப்பிட்டு முடிந்ததும், ஒய்வெடுக்க நகரச் சாலைகளில் புகுந்துவிடுகின்றன. ஹோட்டல்கள், டீ கடைகள், கோயில், காய்கறி கடைகள் மற்றும் பஸ் நிலையத்திற்கு புகுந்து மீதமான உணவுப் பொருட்கள், கழிவுப் பொருட்களை சாப்பிடுகின்றன. பெரும்பாலும், கால்நடைகளை வளர்ப்போர் தங்கள் வீடுகளில் மாட்டுத்தொழுவம் வைத்துக் கொள்வதில்லை.

அருகில் உள்ள கண்மாய் கரைகளிலும், வைகை ஆறு கரைகளிலும், வீட்டு ஓரங்களிலும் கம்புகளில் கட்டிப்போட்டு வளர்க்கிறார்கள். குடியிருப்பு பகுதிகளில் கால் நடைகளை மாட்டுத் தொழுவங்கள் இல்லாமல் வளர்க்க கூடாது மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. ஆனாலும், மாட்டுத்தொழுவம் வைத்துக் கொள்ளும் அளவிற்கு மாடு வளர்ப்போர் வீடுகளில், அதற்கான நிலம் இல்லை.

அதனால், பொதுவெளிகளையே மாட்டுத் தொழுவமாக்கி, வைகை ஆற்றையே மேய்ச்சல் நிலமாக மாடு வளர்ப்போர் பயன்படுத்தி வருகிறார்கள். மாடுகள் சாலைகளில் சுற்றித்திரிய விட்டால், ரூ.1,500 முதல் ரூ.2,500 மற்றும் ரூ.3,500 வரை மாநகராட்சி அபராதம் விதிக்கிறது. ஆனாலும், மாடு வளர்ப்போர் மீண்டும், மீண்டும் மாடுகளை சாலைகளில் அவிழ்த்துவிடுகிறார்கள்.

மாடுகளை பிடித்தால் உள்ளூர் அரசியல் கட்சியினர், அமைப்பினர், மாட்டு உரிமையாளர்களுக்கு ஆதரவாக வந்து பிடித்த மாடுகளை விடுவதற்கு பிரச்சனை செய்கிறார்கள். அதனால், சாலைகளில் சுற்றிதிரிந்து நகரச் சாலைகளில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் மாடுகளை கட்டுப்படுத்த முடியாமல் மாநகராட்சி திணறியது.

தற்போது மாநகராட்சி, நகரச் சாலைகளில் உலாவும் மாடுகளை கட்டுபடுத்த பிடித்த மாடுகளை, மாநகராட்சி அபராதம் விதிக்காமல் மாவட்டம், விட்டு மாவட்டம் கொண்டு சென்று, வெளி மாவட்டங்களில் உள்ள கோசாலைகளில் கால்நடை பராமரிப்பு துறை மூலம் பராமரிக்கும் நடவடிக்கையை எடுத்துள்ளது.

முதற்கட்டமாக, கடந்த வாரம் சாலைகளில் சுற்றிதிரிந்த 15 மாடுகளை பிடித்த மதுரை மாநகராட்சி, தென்காசி மாவட்டத்திற்கு கொண்டு சென்று அங்குள்ள கோசலைகளில் வைத்து பராமரித்து வருகிறது. பிடித்த மாடுகளை இனி, மாநகராட்சி அபராதம் விதித்து மாடு உரிமையாளர்களிடம் வழங்கப்போவதில்லை என்றும், இது போன்ற நடவடிக்கை தொடரும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

இது குறித்து மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ”மாடுகளை பிடித்து அபராதம் விதித்து பராமரிக்க ஒரு நாளைக்கு ஒரு மாட்டிற்கு தீவனம் வாங்குவதற்கு ரூ.500 செலவிட வேண்டிய உள்ளது. மாடு உரிமையாளர் அபராதம் செலுத்தி மீட்டு செல்லும் வரை பராமரிக்க மாநகராட்சி ஊழியர்களை பணியமர்த்த வேண்டிய உள்ளது. அதனால், பிடித்த மாடுகளை செல்லூர் மாநகராட்சி குடோனில் ஒன்று சேர்த்து லாரியில் வேறு மாவட்டங்களுக்கு கொண்டு செல்கிறோம். பசுமாடுகளை எளிதாக பிடித்துவிடலாம். காளை மாடுகளை ஜல்லிக்கட்டு காளைகளை கையாளுவோரை கொண்டு பிடிக்க வேண்டிய உள்ளது.

அதற்காக மாடுகளை பிடிக்க வருவோருக்கு ஒரு நாளைக்கு ரூ.700 ஊதியம் கொடுக்க வேண்டிய உள்ளது. மாடுகளை பிடித்து அபராதம் விதிக்கும் நடவடிக்கை பலனளிக்காததால் இதுபோன்ற நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது, நகரச் சாலைகளில் மாடுகளால் ஏற்படும் விபத்துகள், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை.” என்றார்.