கர்நாடகாவைச் சேர்ந்த முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பா மீது போக்சோ புகார் அளித்த பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பா மீது, ஒரு பெண் பாலியல் புகார் அளித்தார். அந்த புகாரில், கடந்த பிரப்ரவரி 2-ம் தேதி தனது மகளுடன் எடியூரப்பாவின் வீட்டிற்குச் சென்றபோது, அவர் தனது மகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்தப் பெண் பரபரப்பு குற்றம் சாட்டினார். இந்த விவகாரம் கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த எடியூரப்பா, நியாயம் கேட்டு தாயும், மகளும் தன்னை அணுகியதாகவும், அவர்களை உதவிக்காக பெங்களூரு காவல் துறை ஆணையரிடம் அனுப்பியதாகவும் தெரிவித்தார். இந்த புகார் குறித்து சதாசிவநகர் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், எடியூரப்பா மீது போக்சோ புகாரளித்த பெண், பெங்களூரு மருத்துவமனையில் திடீரென இன்று காலமானார். சுவாசக்கோளாறு அவர் காரணமாக மே 26-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் மோகன் கூறுகையில், அந்த பெண்ணை அவரது மகள் மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். கடந்த எட்டு ஆண்டுகளாக சிறுநீரகக் கோளாறு மற்றும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நுரையீரல் புற்றுநோய் பாதிப்பால் அவரது தாய் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து, அவருக்கு உடனடியாக தீவிர சிகிச்சை அளித்த போதிலும், கடுமையான சுவாசக் கோளாறால் அந்தப் பெண் உயிரிழந்தார் என்று மருத்துவர் தெரிவித்தார். கர்நாடகா முன்னாள் முதல்வர் மீது பாலியல் புகார் கூறிய பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.