வேலை தேடி உதவி கோரிய இளம்பெண்ணுடன் வீடியோ காலில் பாலியல் சேட்டைகளை அரங்கேற்றியதாக, பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் ஆம் ஆத்மி அமைச்சர் ஒருவர் வசமாக சிக்கியிருக்கிறார்.
பஞ்சாப் அமைச்சரான பால்கர் சிங், இளம்பெண் ஒருவருடன் ஆன்லைன் தொடர்பில் தகாத பாலியல் நடத்தையில் ஈடுபட்டதாக, பாஜக தலைவர் தஜிந்தர் பால் சிங் பாக்கா குற்றம் சாட்டி உள்ளார். இதனையடுத்து பஞ்சாப் டிஜிபி கௌரவ் யாதவுக்கு தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். வேலை தேடும் பெண்ணுடன் வீடியோ அழைப்பின் போது சிங் பாலியல் செயலில் ஈடுபட்டதாக பால் சிங் பாக்கா குற்றம் சாட்டி உள்ளார்.
புகாரளிக்கப்பட்ட சம்பவம் சம்பந்தப்பட்ட பெண்ணின் கண்ணியத்திற்கு இழுக்கு சேர்க்கக்கூடியது என்று கண்டனம் தெரிவித்திருக்கும் ரேகா சர்மா, இந்த விவகாரத்தில் பஞ்சாப் டிஜிபியின் உடனடி மற்றும் தனிப்பட்ட தலையீட்டைக் கோரினார். குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், தண்டனைக்குரிய சட்டப்பிரிவுகள் தகவல் அறிக்கையில் இணைக்கப்பட வேண்டும் என்றும் ரேகா சர்மா வலியுறுத்தினார்.
"குற்றம் சாட்டப்பட்ட நபரை விரைவில் கைது செய்ய வேண்டும் மற்றும் எஃப்ஐஆர் நகலுடன் எடுக்கப்பட்ட விரிவான நடவடிக்கை தொடர்பான அறிக்கையை 3 நாட்களுக்குள் தேசிய மகளிர் ஆணையத்துக்கு தெரிவிக்க வேண்டும்," என்றும் ரேகா சர்மா தெரிவித்துள்ளார்.
"பஞ்சாப் எம்எல்ஏ பால்கர் சிங்கின் தகாத நடத்தையைக் குற்றம் சாட்டும் ட்விட்டர் பதிவால் தேசிய மகளிர் ஆணையம் பெரிதும் கலக்கமடைந்துள்ளது. புகாரளிக்கப்பட்ட செயல்கள், ஐபிசி பிரிவுகள் 354 மற்றும் 354பி ஆகியவற்றின் கீழ் கடுமையான மீறல்களில் சேரும். இது ஒரு பெண்ணின் கண்ணியத்தை நேரடியாக அவமதிக்கிறது.
இதற்கு தேசிய மகளிர் ஆணையம் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது. இத்தகைய முறைகேடு தொடர்பாக உடனடி மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை உறுதி செய்ய மாநில டிஜிபியின் அவசரத் தலையீட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 3 நாட்களில் ஒரு விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்" என்று தேசிய மகளிர் ஆணையம் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளது.
ஆனால் தன்மீதான குற்றச்சாட்டுகள் குறித்து பால்கர் சிங் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளார். மேலும் தனதுக்கு எதிராக சமூக ஊடங்களில் வைரலான ஆபாச வீடியோ குறித்தும் ஏதும் தெரியாது என்றும் செய்தியாளர்களிடம் அவர் கூறியுள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
135 கி.மீ. வேகம்... கரையை கடக்கும் போது சூறையாடிய 'ரெமல்' புயல்: மேற்கு வங்கத்தில் தொடரும் கனமழை!
முதல் முறையாக 50 டிகிரி செல்சியஸ் வெப்பம்... ராஜஸ்தான் மக்கள் அதிர்ச்சி!