வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ரெமல் புயலாக மாறுவதற்கு தாமதம் ஏற்பட்டு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப் பெற்றுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ரெமல் புயலாக உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.
இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலம் ரெமல் புயலாக உருமாறும் என கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது நிலவி வரும் காற்று சுழற்சி காரணமாக ரெமல் புயல் உருவாவதில் தாமதம் ஏற்பட்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன்படி இன்று மாலைக்குள் ரெமல் புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. புயல் உருவாகியுள்ளதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை சற்று குறைந்துள்ளது. ஒரு சில இடங்களைத் தவிர பிற இடங்களில் மழை முற்றிலும் இல்லாததால் பொதுமக்கள் சற்றே கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
இருப்பினும் வங்கக் கடல் தொடர்ந்து கொந்தளிப்புடன் காணப்பட்டு வருவதால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையமும், மீன்வளத்துறை அதிகாரிகளும் அறிவுறுத்தியுள்ளனர். இன்று மாலை உருவாகும் ரெமல் புயல் வருகிற 26 மற்றும் 27-ம் தேதிகளில் வங்கதேசம் அல்லது மேற்குவங்க கரையோரம் கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.