மோடி மீண்டும் ஆட்சியமைப்பாரா, பாஜகவுக்கு எத்தனை சீட் தேறும்?... பிரசாந்த் கிஷோரின் லேட்டஸ்ட் கணிப்பு இதோ!


பிரசாந்த் கிஷோர் - பிரதமர் மோடி

நடப்பு மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைக்குமா, பெரும்பான்மைக்கான சீட்களில் எத்தனை பெறும் என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு, பிரபல தேர்தல் வியூகவாதியான பிரசாந்த் கிஷோர் தனது கணிப்புகளை தெரிவித்திருக்கிறார்.

அதிருப்தி வாக்குகள்:

பல கட்டமாக இந்தியாவில் நடைபெற்று வரும் 2024 மக்களவைத் தேர்தலின் மையமாக, மீண்டும் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமையுமா என்ற கேள்வியே தொக்கி நிற்கிறது. பிரதமராக மோடிக்கு எதிரான அல்லது ஆதரவான அலை எதுவும் வெளிப்படையாக தென்படாததும் இந்த கேள்விக்கு அழுத்தம் சேர்த்திருக்கிறது.

2 முறை தொடர்ந்து ஆட்சி பீடத்தில் பாஜக அமர்ந்திருந்ததால் அதிருப்தி வாக்குகள் அதிகமிருக்கும் என்றும், பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஒரே குடையின் கீழ் இணைந்திருப்பதும், தேர்தல் முடிவு தொடர்பான கணிப்புகளை கடினமாக்கி வருகின்றன.

உத்தரபிரதேச பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி

அதிகமாக இருக்கும்:

இந்த சூழலின் மத்தியில் பிரபல தேர்தல் வியூகவாதியான பிரசாந்த் கிஷோர் என்டிடிவி-க்கு அளித்திருக்கும் இன்றைய பேட்டியில், சுவாரசிய கணிப்புகளை வெளியிட்டுள்ளார். அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூக உபாயங்களை வகுத்தளிக்கும் தனது வழக்கமான பணிக்கு இடைவெளி தந்திருக்கும் பிரசாந்த் கிஷோர், ஜன் சூரஜ் என்ற கட்சியை பீகாரில் ஆரம்பித்து நேரடி அரசியலிலும் குதித்துள்ளார். அரசியல் ஜோதியில் அவரது முயற்சிகள் பெரிதாக சோபிக்காது போனாலும், வியூகவாதியாக பிரசாந்த் கிஷோரின் கணிப்புகளுக்கு எதிர்பார்ப்புகள் நீடிக்கவே செய்கின்றன.

’2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவின் மற்றுமொரு வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடி வழிநடத்துவார் என்றும், பாஜக வெற்றி பெறும் தொகுதிகளின் எண்ணிக்கை கடந்த 2019 வெற்றிக்கு அருகிலோ அல்லது அதைவிட சற்றே அதிகமாகவோ இருக்கும்’ என்பது பிரசாந்த் கிஷோரின் லேட்டஸ்ட் கணிப்பாக அமைந்துள்ளது. கடந்த முறை 303 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. “மோடி தலைமையிலான பாஜக மீண்டும் ஆட்சிக்கு திரும்பும் என்றே நினைக்கிறேன். அவர்கள் கடந்த தேர்தலில் வென்ற அதே எண்ணிக்கையைப் பெறலாம் அல்லது சற்று சிறப்பாகச் செயல்படலாம்” என்று பிரசாந்த் கிஷோர் கணித்துள்ளார்.

கோபம் இல்லை:

"அடிப்படைகளை நாம் பார்க்க வேண்டும், தற்போதைய பாஜக அரசாங்கம் மற்றும் அதன் பிரதமரான மோடி மீது கோபம் இருந்தால், மக்கள் தங்கள் வாக்களிப்பில் மாற்று முடிவைத் தேர்ந்தெடுக்க நேரிடலாம். ஆனால் நாங்கள் இதுவரை அப்படி எதையும் கேள்விப்படவில்லை. ஆங்காங்கே மோடிக்கு எதிரான கோபம், ஏமாற்றம், ஆதங்கம் ஆகியவை தென்படலாம்; ஆனால் தேர்தல் முடிவைத் திருப்பிப் போடும் அளவுக்கு மக்கள் மத்தியிலான பரவலான கோபத்தைப் பற்றி நாங்கள் கேள்விப்பட வில்லை" என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

பிரசாந்த் கிஷோர்

மீண்டும் ஆட்சி:

பாஜகவின் 370 இடங்கள் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 400-க்கும் அதிகமான இடங்கள் ஆகியவை தொடர்பான எதிர்பார்ப்புகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த பிரசாந்த் கிஷோர், “பாஜகவின் கணிப்புகளுக்கு குறைவான சீட் எண்ணிக்கையுடன் தேர்தல் முடிவுகள் வெளியானால் ‘நாங்கள் ஆட்சியமைக்க மாட்டோம்’ என்று அவர்கள் கூறப்போவதில்லை. பெரும்பான்மை வாய்க்கிறதா இல்லையா என்பதை மட்டுமே பார்ப்பார்கள். தேர்தல் பிரச்சாரக் களத்தில் அரசியல் சலசலப்புகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்; ஆனால் பாஜக மீண்டும் ஆட்சி அமைப்பதை தடுப்பதற்கான எந்த அபாயத்தையும் நான் பார்க்கவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கும் என்பதாகவே தெரிகிறது” என்று முத்தாய்ப்பாக முடித்திருக்கிறார் பிரசாந்த் கிஷோர்.

x