2024 மக்களவைத் தேர்தலில் இதுவரையிலான வாக்குப்பதிவுகளில் பாஜக 310 இடங்களை பெற்றுள்ளதாகவும், மிச்சமிருக்கும் இரு கட்டத்தேர்தல்களில் 400 என்ற இலக்கைத் தாண்டிவிடுவோம் என்றும் அமித் ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலின் 5 கட்ட வாக்குப்பதிவுகள், நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிறைவடைந்துள்ளன. இதன் மூலம் பாஜக 310 இடங்களைக் கடந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று நம்பிக்கை தெரிவித்தார். மீதமுள்ள இரண்டு கட்ட தேர்தல்களில் 400 இடங்களை பாஜக நிச்சயம் தாண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலுடன், ஒரே நேரத்தில் சட்டமன்றத் தேர்தலையும் எதிர்கொள்ளும் ஒடிசா மாநிலத்தின் சம்பல்பூர் மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா, அங்கே 75 சட்டமன்றத் தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதே பாஜகவின் இலக்கு என்றும் கூறினார்.
”ஒடிசாவின் தற்போதைய தேர்தல், நாட்டை வலிமையாக்குவதற்கும், நரேந்திர மோடியை மூன்றாவது முறையாக பிரதமராக்குவதற்கும், ஒடிசாவை வளர்ச்சியடையச் செய்வதற்கும், ஒடியாவின் பெருமையை மீட்டெடுப்பதற்கும் உரியதாகும்" என்றும் அவர் பரவசத்துடன் பட்டியலிட்டார்.
முதல்வர் நவீன் பட்நாயக் மட்டுமன்றி முதல்வரின் நெருங்கிய உதவியாளரும், தமிழகத்தை சேர்ந்தவருமான வி.கே.பாண்டியனை குறிவைத்தும், தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அமித் ஷா தாக்கினார். தமிழரின் ஆதரவை பெற்று ஆட்சி நடத்துவதன் மூலம் ஒடிசா முதல்வர், ஒடியா கலாச்சாரத்தை அவமதித்துள்ளார் என்றும் அமித் ஷா குற்றம் சாட்டினார்.
“இயற்கை வளங்கள் நிறைந்த வளமான மாநிலமாக இருந்தாலும், ஒடிசா ஏழையாகவே உள்ளது. வளங்களை கொள்ளையடிக்க நவீன் பட்நாயக்கின் பாபுக்கள் செயல்படுகின்றனர். உங்கள் நிலத்தை தமிழ் பாபு ஆளலாமா? ஒடியா மொழியில் பேசக்கூடிய, ஜெகநாதரின் பாரம்பரியத்தை முன்னோக்கி எடுத்துச் செல்லும் நபருக்கு மட்டுமே பணியை ஒப்படைக்க முடியும். 25 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒடிசாவில் ஒடியா மொழி, கலாச்சாரம் மற்றும் இலக்கியத்தின் அடிப்படையில் ஒரு அரசாங்கத்தை பாஜக அமைக்கப் போகிறது” என்றும் அமித் ஷா உறுதிபட தெரிவித்தார்.