கொடைக்கானலில் தொடர்ந்து பெய்த மழையால் நீடித்த காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி, உடல்நிலை பாதிக்கப்பட்ட 5 வயது மகனுடன் தவித்த தாயை 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
வங்கக்கடலில் வருகிற 22-ம் தேதி காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக கடந்த ஒரு வார காலமாகவே தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டுக்கு ஆரஞ்சு மற்றும் ரெட் அலர்ட் விடப்பட்டிருந்த நிலையில், தற்போது ரெட் அலர்ட் வாபஸ் பெறப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக கனமழை தொடங்கி மிதமான மழை வரை பெய்து வருகிறது.
இந்நிலையில் கொடைக்கானல் மலைப்பகுதி முழுவதும் பரவலாக நேற்று மற்றும் நேற்று முன் தினம் கனமழை கொட்டியது. இதனால் கொடைக்கானலில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. மூங்கில் காடு என்ற கிராமம் அருகே உள்ள பள்ளங்கி கோம்பை ஆற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.
இதனால் இரண்டு நாட்களாக இந்த கிராமத்தில் இருந்து பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக நகரப் பகுதிகளுக்கு வர முடியாமல் சிரமத்தில் இருந்து வந்தனர். இதை தொடர்ந்து வெள்ளத்தை கண்காணிப்பதற்காக வருவாய்த் துறையினர் மற்றும் அவசரகால தேவைக்காக தீயணைப்புத் துறையினர் ஆற்றின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
மூங்கில் காடு கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் ஐந்து வயது மகனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. ஆனால் மருத்துவமனைக்கு ஆற்றைக் கடந்து செல்ல முடியாததால் அவர் நீண்ட நேரமாக கரையோரமாக நின்றபடி தவித்துக் கொண்டிருந்தார்.
இதுகுறித்து அறிந்ததும் தீயணைப்புத் துறையினரும், வருவாய்த் துறையினரும் இணைந்து அந்த தாய், மகனை மீட்க முடிவு செய்தனர். இதையடுத்து கயிறு மூலம் தாயையும் குழந்தையும் பத்திரமாக, காட்டாற்று வெள்ளத்தில் சீற்றத்தையும் தாண்டி மீட்ட தீயணைப்பு துறையினர், அவர்களை கோட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர். கோட்டாட்சியர் இருவரையும் அவரது உறவினர் வீட்டில் அழைத்து சென்று விட்டுள்ளார்.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் மூங்கில் காடு கிராமத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் உடனடியாக செய்து தரப்படும் என அரசுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அங்கு வெள்ளம் குறையாத நிலையில், நீர்வரத்தை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.