250 ஜோடி உடைகள் வைத்திருந்தேன் என்பதே என் மீதான மிகப்பெரும் குற்றச்சாட்டு - பிரதமர் மோடியின் புதுவித விளக்கம்


விதவிதமான ஆடைகளில் மோடி

’250 ஜோடை ஆடைகள் வைத்திருந்தேன் என்பதே எனக்கு எதிரான மிகப்பெரும் குற்றச்சாட்டு’ என பிரதமர் மோடி பழைய அரசியல் விவகாரம் ஒன்றை நினைவுகூர்ந்துள்ளார்.

பிரதமர் மோடி வண்ணமயமானதும், செல்லும் இடம் மற்றும் கலாச்சார பின்னணிக்கு ஏற்றவாறும் ஆடைகளை தேர்வு செய்து உடுத்துவதிலும் அலாதி ஆர்வம் கொண்டவர். பன்முக தேசமாக இந்தியாவின் வெவ்வேறு திசையிலான மாநிலங்களுக்கு பயணிக்கையில், அந்த பிராந்தியத்தின் பின்னணியை பிரதிபலிக்கும் ஆடைகளை அணிந்து பொதுமக்களை வசீகரிப்பார்.

பிரதமர் நரேந்திர மோடி

அதே போன்று பல லட்சம் மதிப்பிலான ஆடைகளை அவர் அணிவதாகவும், எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவது உண்டு. நடப்பு மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் கூட ரூ1.6 லட்சம் ஊதியம் பெறும் பிரதமர் மோடி, பல லட்சம் மதிப்பிலான ஆடைகள் அணிவதன் பின்னணி குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியிருந்தார். தற்போது மோடியே தனது ஆடை சர்ச்சை தொடர்பாக சுவாரசியமான விளக்கம் அளித்துள்ளார்.

செய்தி நிறுவனம் ஒன்றுக்கு மோடி அளித்த பேட்டியில், ”எனது அரசியல் வாழ்க்கையில் நான் 250 ஜோடி ஆடைகளை வைத்திருந்தாக எதிர்க்கட்சிகள் சுமத்தியதுதான் நான் எதிர்கொண்ட மிகப்பெரிய குற்றச்சாட்டு” என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவரும், குஜராத் முன்னாள் முதல்வருமான அமர்சிங் சவுத்ரி தன்னை நோக்கி இந்த குற்றச்சாட்டை முன்வைத்ததாகவும், பின்னொரு பொதுக்கூட்டத்தில் அதற்கு தான் பதிலளித்தது குறித்தும் மோடி விளக்கினார்.

பிரதமர் மோடி

காங்கிரஸ் தலைவர் சவுத்ரியின் குற்றச்சாட்டை தான் ஏற்றுக்கொண்டதோடு, ”250 கோடி ரூபாய் கொள்ளையடித்தவர் வேண்டுமா அல்லது 250 ஜோடி உடைகள் வைத்திருப்பவர் வேண்டுமா என்று நான் மக்களிடம் கேட்டேன். 250 ஜோடி ஆடைகளுடனான முதல்வரை குஜராத் மக்கள் பின்னர் தேர்வு செய்தனர்” என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

அதே வேளையில் ’எண்கள் கணக்கில் சவுத்ரி பிசகி விட்டதாகவும், தன்னிடம் இருக்கும் உடைகளின் எண்ணிக்கை என்பது 250 அல்ல; 25 அல்லது 50ஆக இருந்திருக்க வேண்டியது’ என்றும் மோடி தெரிவித்தார்.

இதையும் வாசிக்கலாமே...

சென்னை உட்பட 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு!

பெட்ரோல் பங்கில் லாரியின் டீசல் டேங்க் வெடித்து பெரும் தீ விபத்து; வைரலாகும் வீடியோ!

x