இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியில் போட்டியிடும் கங்கனா ரனாவத்துக்கு காஸாவில் கருப்புக் கொடி காட்டப்பட்ட விவகாரத்தில், காங்கிரஸ் மீது பாஜக குற்றச்சாட்டை வீசியுள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள லாஹவுல்-ஸ்பிதி மாவட்டத்தின் காஸாவுக்கு விஜயம் செய்த நடிகை மற்றும் பாஜகவின் அதிரடி அரசியல் பிரபலமான கங்கனா ரனாவத்துக்கு எதிராக இன்று கருப்புக் கொடிகள் காட்டப்பட்டதோடு, அவருக்கு எதிராக ’கோ பேக் கங்கனா’ முழக்கங்களும் எழுப்பப்பட்டன. மண்டி மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளரான கங்கனா ரனாவத், முன்னாள் முதல்வர் ஜெய்ராம் தாக்கூருடன் காஸாவில் வாக்கு சேகரிப்பு மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சென்றிருந்தார்.
புத்த மத ஆன்மிகத் தலைவர் தலாய்லாமா குறித்து முன்னதாக கங்கனா ரனாவத் கூறிய கருத்துக்கு, லாஹவுல்-ஸ்பிதி மக்கள் கருப்புக் கொடி காட்டியதாக காங்கிரஸ் கூறியது. ஆனால் கருப்புக்கொடி காட்டியவர்கள் அனைவரும் காங்கிரஸார் என்று பாஜக குற்றம்சாட்டியது. உள்ளூர் செய்தி தளங்கள் பாஜக தரப்பை உறுதி செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு தலாய்லாமா ஒரு சிறுவனுக்கு உதட்டில் முத்தம் கொடுத்த விவகாரம் சர்ச்சையானது. அது தொடர்பாக பின்னர் தலாய்லாமா விளக்கம் அளித்ததோடு, மன்னிப்பும் கோரியிருந்தார். ஆனால் தலாய்லாமாவை விமர்சிக்கும் வகையில் ட்விட்டரில் கங்கனா ரனாவத் வெளியிட்ட பதிவு காரணமாக எதிர்ப்புகளை சந்தித்தார்.
பல தரப்பு அழுத்தங்களை அடுத்து தனது பதிவு நகைச்சுவைக்கானது என கங்கனா சமாளித்துப் பார்த்தார். அதன் பின்னர் ஓராண்டு கழித்து தேர்தல் களத்தில் அதற்கான எதிர்ப்புகளை கங்கனா எதிர்கொண்டிருக்கிறார்.
.
"புத்த ஆன்மிகத் தலைவரான தலாய் லாமாவைப் பற்றிய கங்கனா ரணாவத்தின் கருத்துக்கள் அவரது தரத்தை தெளிவாகப் பிரதிபலிக்கின்றன. எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மண்டி நாடாளுமன்றத் தொகுதியின் பாஜக வேட்பாளர் கங்கனா ரனாவத்துக்கு எதிராக லாஹவுல்-ஸ்பிதி மக்கள் கருப்புக் கொடி காட்டினர். இருப்பினும், ஜூன் 1 அன்று, மண்டி மக்களவைத் தொகுதியின் ஒட்டுமொத்த மக்களும் அவரை வெளியேற்றும் நாள் வெகு தொலைவில் இல்லை" என்று காங்கிரஸ் கட்சி தனது ’கோ பேக் கங்கனா’ பதிவில் தெரிவித்துள்ளது.
ஆனால், பாஜக தலைவரும், முன்னாள் முதல்வருமான ஜெய்ராம் தாக்கூர், கருப்புக்கொடி மற்றும் போராட்டம் அனைத்தும் காங்கிரஸ் கட்சியினரின் நாடகம் என்று சாடியுள்ளார். “இன்று நாங்கள் லாஹவுல் ஸ்பிதியில் உள்ள காஸா என்ற நகரத்திற்குச் சென்றோம். மண்டி தொகுதி பாஜக வேட்பாளர் கங்கனா ரனாவத்தும் என்னுடன் இருந்தார். காங்கிரஸ் கட்சியினர் எங்கள் வாகனங்களை நிறுத்த முயன்றதும், கற்களை வீசி தாக்குதல் நடத்தியதும் மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த சம்பவத்தை நான் கண்டிக்கிறேன் ”என்று அவர் பின்னர் பேட்டியளித்தார்.
காங்கிரஸ் வேட்பாளர் விக்ரமாதித்ய சிங், ’தலாய் லாமா தொடர்பாக கங்கனாவின் கருத்துக்களால் காஸா மக்கள் புண்பட்டுள்ளனர்’ என்று பேட்டியளித்துள்ளார். மேலும் தலாய்லாமாவிடம் கங்கனா ரனாவத் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
ஓராண்டு முன்னதாக தலாய்லாமாவுக்கு எதிராக கங்கனா ரனாவத் வெளியிட்ட மார்ஃபிங் புகைப்படம் தற்போது தேர்தல் களத்தில் அவருக்கு எதிரான சர்ச்சைகளை கூட்டி வருகிறது.
இதையும் வாசிக்கலாமே...
பெட்ரோல் பங்கில் லாரியின் டீசல் டேங்க் வெடித்து பெரும் தீ விபத்து; வைரலாகும் வீடியோ!
ஈரான் அதிபர் விபத்தில் பலி... அதிகாரப்பூர்வ அறிவிப்பு... பட்டாசுகள் வெடித்து கொண்டாடிய மக்கள்!
3,000க்கும் மேற்பட்ட படகுகள் நிறுத்தம்... 4வது நாளாக 20,000 தொழிலாளர்கள் வேலை இழப்பு!
குற்றால வெள்ளத்தில் உயிரிழந்த சிறுவன் வ.உ.சி. கொள்ளுப் பேரன்; வெளியான அதிர்ச்சித் தகவல்!