தங்கம் சவரனுக்கு ரூ.55,000 கடந்தது... வாரத்தின் முதல் நாளில் அதிர்ச்சி!


தங்கம்

வாரத்தின் முதல் நாளான இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து சவரனுக்கு 55,200 ரூபாயாக உயர்ந்துள்ளது.

தங்கத்தின் விலை கடத்த மார்ச் 1ம் தேதி முதல் வரலாறு காணாத உச்சங்களை தொட்டு வருகிறது. விரைவில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 55 ஆயிரம் ரூபாயை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில நாட்கள் தங்கத்தின் விலை குறைந்தது. ஆனால் கடந்த அட்சய திருதியை முன்னிட்டு அதிகபட்சமாக கிராம ஒன்றிற்கு 155 ரூபாய் வரை தங்கம் உயர்ந்து பொதுமக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருந்தது.

தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது

இந்த நிலையில் நேற்று ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 6,850 ரூபாய்க்கும், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 54 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்று வர்த்தக நேரம் துவங்கியதில் இருந்து தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்ததால், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 50 ரூபாய் உயர்ந்து 6,900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 400 ரூபாய் உயர்ந்து 55,200 ஆக அதிகரித்துள்ளது. தங்கத்தின் விலை கிராமுக்கு 55 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது, பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளி

இதேபோல் வெள்ளியின் விலையும் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி நேற்று 96 ரூபாய் 50 பைசாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று ஒரே நாளில் வெள்ளியின் விலை கிராமுக்கு மூன்று ரூபாய் 50 பைசா உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் வெள்ளி 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலை வரலாற்றில் முதல்முறையாக கிராம் ஒன்றுக்கு நூறு ரூபாய் என உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

x