நாடு முழுவதும் 49 தொகுதிகளில் 5ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக கடந்த ஏப்ரல் 19ம் தேதி துவங்கி ஜூன் 1ம் தேதி வரை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 4 கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ள நிலையில், இன்று 5ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. பீகாரில் உள்ள 5 தொகுதிகள், ஜார்க்கண்டில் 3 தொகுதிகள், மகாராஷ்டிராவில் 13 தொகுதிகள், ஒடிசாவில் 5 தொகுதிகள், உத்தரபிரதேசத்தில் 14 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 7 தொகுதிகள், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்களில் தலா ஒரு தொகுதி என மொத்தம் 49 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இதில் முக்கிய தொகுதிகளாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி போட்டியிடும் அமேதி தொகுதி, காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் ரேபரேலி தொகுதி, உத்தரபிரதேச மாநிலம் லக்னோ மற்றும் கைசர்கஞ்ச் ஆகிய தொகுதிகள் அடங்கியுள்ளன. மொத்தம் 695 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் களமிறங்கியுள்ளனர். காலை 7 மணிக்கு துவங்கியுள்ள வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.
மக்களவைத் தேர்தல்களுடன் ஒடிசா மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல்களும் நடைபெற்று வருகிறது. கடந்த மே 13ம் தேதி துவங்கி ஜூன் 1ம் தேதி வரை 4 கட்டங்களாக அங்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்று இரண்டாவது கட்டமாக நடைபெறும் தேர்தலில் 35 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 5வது கட்ட தேர்தலை ஒட்டி 94 ஆயிரத்து 732 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 9.47 லட்சம் வாக்குச்சாவடி அலுவலர்கள் இந்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 8.95 கோடி மக்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.