‘தங்கள் வாக்குவங்கியை இழந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் ராமர் கோவில் விழாவில் கலந்து கொள்ளவில்லை’ என பாஜக மூத்த தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசம் மாநிலம் அலகாபாத் தொகுதியில் பாஜக வேட்பாளர் நீரஜ் திரிபாதிக்கு ஆதரவு திரட்டும் பிரச்சார கூட்டத்தில் பேசிய அமித் ஷா, ’தற்போது நடைபெறும் தேர்தல், ராமர் பக்தர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்கும், ராமருக்கு கோயிலை கட்டிய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையே நடக்கும் போர்’ என்றார்.
"ராமர் கோயிலை 70 ஆண்டுகளாக காங்கிரஸ் - சமாஜ்வாதி அரசுகள் நிலுவையில் வைத்திருந்தன. கரசேவகர்கள் மீது சமாஜ்வாதி அரசு துப்பாக்கிச் சூடு நடத்தியது. மோடியை இரண்டாவது முறையாக மக்கள் பிரதமராக்கியதும் சூழல் முற்றிலுமாக மாறியது. ராமர் கோவிலுக்காக நீதிமன்றத்தில் வெற்றி பெற்று மோடி பூமிபூஜை செய்தார். வெற்றிகரமாக குடமுழுக்கும் நடத்தினார்” என்று பெருமிதம் தெரிவித்தார் அமித் ஷா.
மேலும் அவர் பேசுகையில் ”ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயில் அறக்கட்டளை உறுப்பினர்கள் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, சமாஜ்வாடி கட்சித் தலைவர்கள் அகிலேஷ் யாதவ், டிம்பிள் யாதவ் ஆகியோருக்கு முறைப்படி அழைப்பு விடுத்தார்கள். ஆனால் தங்கள் வாக்கு வங்கியை இழக்க நேரிடும் என்ற அச்சத்தில் அவர்கள் ராமர் கோயில் விழாவில் பங்கேற்கவில்லை” என்று அமித் ஷா கூறினார்.
"அவர்களின் வாக்கு வங்கி யார் தெரியுமா? நீங்கள் அவர்களின் வாக்கு வங்கி அல்ல. ஊடுருவல்காரர்கள்தான் அவர்களின் வாக்கு வங்கி. ஆனால் பாஜகவில் உள்ள நாங்கள் யாருக்கும் பயப்படவில்லை. மோடி ராமர் கோயிலை கட்டியது மட்டுமல்ல, தர்பாரையும் அலங்கரித்தார். அவுரங்கசீப்பால் உடைக்கப்பட்ட காசி விஸ்வநாதரும், சோமநாதர் கோயிலும் தங்கத்தால் கட்டப்பட்டு வருகின்றன.
ஒரு பக்கம் ராமர் பக்தர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டவர்கள்; இன்னொரு பக்கம் ராமர் கோயில் கட்டிய நரேந்திர மோடி. இந்த இரு தரப்புக்கும் இடையே முடிவு எடுப்பதுதான் இந்த தேர்தல். இது நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தல். தேசத்தை பாதுகாப்பானதாக்க, பயங்கரவாதம், நக்சலிசம் மற்றும் வறுமையை ஒழிக்க, ஒரு சிறந்த இந்தியாவை உருவாக்குவதற்கான தேர்தல்" என்றும் அமித் ஷா கூறினார்.