முடக்க முயலும் நெருக்கடிகளாலும், மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையாகவும் சவுக்கு ஊடகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அதன் எக்ஸ் வலைதளப் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண் போலீஸாரை அவதூறாக பேசிய வழக்கில் தேனியில் தனியார் விடுதியில் தங்கியிருந்த அரசியல் விமர்சகரும், யூடியூபருமான சவுக்கு சங்கரை தமிழக போலீஸார் கைது செய்தனர். மேலும், அவரது பேட்டியை ஒளிபரப்பு செய்த ரெட் பிக்ஸ் யூடியூப் நிறுவனரும், ஊடகவியலாளருமான பிளிக்ஸ் ஜெரால்டும் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் சவுக்கு சங்கர் மீது சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் வெவ்வேறு புகார்கள் அளிக்கப்பட்ட நிலையில், தமிழக காவல் துறை அடுத்தடுத்து வழக்குப்பதிவு செய்து, அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்தது.
இந்நிலையில் சவுக்கு சங்கரின் சவுக்கு ஊடகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக எக்ஸ் தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பதிவில், “அன்புக்குரிய தமிழக மக்களுக்கும், சவுக்கு ஊடகத்தை பின்தொடர்பவர்களுக்கும் வணக்கம்! இதுவரை உங்களின் குரலாக ஒலித்துக் கொண்டிருந்த சவுக்கு ஊடகம் மற்றும் அதன் நிறுவனரான சவுக்கு சங்கரை முடக்கும் விதமாக நிகழ்ந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளை நன்கு அறிவீர்கள்.
சவுக்கு என்பது ஒரு குடும்பம். அதில் நீங்களும் ஓர் அங்கம். உங்களைப் பாதுகாக்கும் பொருட்டு, சவுக்கு ஊடகத்தின் செயல்பாடுகளை இன்றிலிருந்து (நேற்று) தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறோம்.
நீதித்துறையின் மீதும் ஜனநாயகத்தின் மீதும் இன்னமும் நம்பிக்கை இருக்கிறது. காலம் வரும் வரை காத்திருப்போம். நன்றி சவுக்கு ஊடகம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.