மோடி மீண்டும் பிரதமரானால் ஆறே மாதத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியா வசமாகும்... யோகி சூளுரை!


யோகி ஆதித்யநாத்

பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பதவியேற்ற 6 மாதங்களில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக மாறும் என்று யோகி ஆதித்யநாத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பாஜகவின் மக்களவைத் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் பாகிஸ்தான் தொடர்ந்து முக்கிய இடம் பிடித்து வருகிறது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை பாகிஸ்தான் தேர்தலுக்கானது என்ற குற்றச்சாட்டு முதல், பாகிஸ்தான் மீது தாக்குதல் தொடுப்போம் என்பவது வரை பாஜகவின் இந்த முழக்கங்கள் இடம்பெறுகின்றன.

இவ்வகையில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மகாராஷ்டிர மாநிலம் பால்கரில் நடைபெற்ற இன்றைய பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய போது, ​​இத்தகைய தீவிரமான கருத்துக்களை தெரிவித்தார்.

யோகி - மோடி

அவர் பேசுகையில்,"எங்கள் எதிரியை நாங்கள் வணங்க மாட்டோம்; எங்கள் மக்களை யாராவது கொன்றாலும் நாங்கள் அவர்களை வணங்க மாட்டோம். ஆனால் அவர்களுக்கு தகுதியானவர்கள் என்று பதிலளிப்போம். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைக் காப்பாற்றுவது பாகிஸ்தானுக்கு கடினமாகிவிட்டது. மூன்றாவது முறையாக மோடி பிரதமராக வரட்டும். அதற்கடுத்த ஆறு மாதங்களுக்குள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக மாறும்" என்று யோகி ஆதித்யநாத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அத்தகைய நடவடிக்கைக்கு மிகுந்த தைரியம் தேவை என்று யோகி ஆதித்யநாத் கூறினார். அந்த தைரியம் மோடிக்கு மட்டுமே இருப்பதாக தெரிவித்த அவர், எதிர்கட்சி வரிசையில் எவருக்குமே அந்த தைரியம் இல்லை என்றார். மேலும் "பாகிஸ்தானின் பயங்கரவாதத்தை எங்களால் எதுவும் செய்ய முடியாது என்று அவர்கள் கூறுகிறார்கள்" என்றும் அவர் சாடினார்.

தேர்தல் பிரச்சாரத்தில் அமித் ஷா, யோகி, மோடி

மும்பை வடக்கு மத்திய மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளர் உஜ்வல் நிகாமுக்கு பிரச்சாரம் செய்த யோகி, தற்போது நடைபெற்று வரும் தேர்தலானது ராம பக்தர்கள் மற்றும் ராமரின் துரோகிகள் ஆகிய இருதரப்பில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் என வர்ணித்தார்.

அயோத்தி ராமர் கோயில் விவகாரம் தொடர்பாக காங்கிரஸை கிண்டல் செய்த ஆதித்யநாத், 2024 மக்களவைத் தேர்தல் மூலம் காங்கிரஸை ஆட்சிக்கு வர ராமர் அனுமதிக்க மாட்டார் என்று கூறினார். ”சில காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால், ராமர் கோயிலை அழிப்போம் என்று கூறுகிறார்கள். ஆனால் ’ராம் லல்லா’ உங்களை ஆட்சிக்கு வரவே அனுமதிக்க மாட்டார்" என்று யோகி ஆதித்யநாத் அந்த பிரச்சாரக் கூட்டத்தில் சூளுரைத்தார்.

இதையும் வாசிக்கலாமே...

லிவிங் டூ கெதர் வாழ்க்கை... நடிகை இறந்த ஒரே வாரத்தில் சின்னத்திரை நடிகரும் தற்கொலை!

சிறுவன் உயிரிழந்த விவகாரம்... குற்றாலம் அருவிகளை வனத்துறையிடம் ஒப்படைக்க முடிவு!

x