ஸ்வாதி மலிவால் குற்றச்சாட்டு பொய்யானது: பிபவ் குமார் போலீஸில் பதில் புகார்


பிபவ் குமார், ஸ்வாதி மலிவால்

ஆம் ஆத்மி எம்பி- தன் மீது தேவையற்ற அழுத்தத்தை உருவாக்கும் முயற்சியில் பொய் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார் என அர்விந்த் கேஜ்ரிவால் உதவியாளர் பிபவ்குமார் டெல்லி போலீஸில் பதில் புகார் அளித்துள்ளார்.

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை சந்திக்க, ஆம் ஆத்மி எம்பி-யும், டெல்லி மகளிர் ஆணைய முன்னாள் தலைவருமான ஸ்வாதி மலிவால், கடந்த 13ம் தேதி அன்று கேஜ்ரிவாலின் அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு சென்றிருந்தார்.

அப்போது, கேஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ்குமார், ஸ்வாதி மலிவாலை தாக்கியதாக போலீஸில் புகார் அளித்துள்ளார். தேர்தல் சமயத்தில் இந்த விவகாரம் ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது.

முதல்வர் இல்லத்துக்கு ஸ்வாதி மலிவாலை அழைத்து வந்து விசாரணை

இந்நிலையில் நேற்று முன்தினம் ஸ்வாதி மலிவாலிடம் டெல்லி போலீஸார் வாக்குமூலம் பெற்று வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவருக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் டெல்லி திஸ் ஹசாரே நீதிமன்றத்தில் ஸ்வாதி மலிவால் நேற்று ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

இதற்கிடையே பிபவ் குமாரிடம் விசாரணை நடத்த டெல்லி போலீஸார் நேற்று அவரது வீட்டுக்கு சென்றனர். ஆனால் பிபவ்குமார் வீட்டில் இல்லாததால், போலீஸாரின் 4 குழுக்கள் அவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் ஸ்வாதி மலிவால் தன் மீது அழுத்தத்தை உருவாக்குவதற்காக போலீஸில் பொய்யான புகார் அளித்துள்ளதாக பிபவ்குமார் தரப்பிலிருந்து டெல்லி போலீஸாருக்கு மின்னஞ்சல் மூலம் பதில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பிபவ் குமார்

அந்தப் புகாரில், “கடந்த 13ம் தேதி காலை முதல்வர் கேஜ்ரிவாலை சந்திக்க வந்த எம்பி-சுவாதி மலிவாலிடம், சந்திப்பதற்கான அனுமதி கடிதம் உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்ப்பதற்காக கேட்கப்பட்டது. ஆனால் அவரிடம் கேஜ்ரிவாலை சந்திப்பதற்கான அனுமதி ஆவணம் இல்லை. பாதுகாவலர்கள் தடுத்தும் மலிவால் வலுக்கட்டாயமாக முதல்வர் இல்லத்துக்குள் நுழைய முயன்றார்.

அவரிடம் விதிமுறைகள் குறித்து தெளிவாக எடுத்துரைக்கப்பட்டும், முதல்வரை சந்திக்க அனுமதிக்காவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டினார்.

தொடர்ந்து முதல்வருக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கம் அவருக்கு இருந்ததால், வலுக்கட்டாயமாக முதல்வர் இல்லத்துக்குள் நுழைய முயன்ற அவரை தொடர்ந்து முன்னோக்கி செல்லவிடாமல் தடுத்தேன்.

அப்போது அவர் என்னை தள்ளினார். பின்னர் ஷோபாவில் அமர்ந்து கொண்டு போலீஸாருக்கு போன் செய்தார். அதைத் தொடர்ந்து என் மீது அப்பட்டமான பொய் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார்.

மக்களவைத் தேர்தல் நடந்து கொண்டிருப்பதால் இவை அனைத்தும் பாஜகவின் உத்தரவின் பேரில் செய்யப்பட்டிருக்கலாம்.

எனவே ஸ்வாதி மலிவால், தொலைபேசி அழைப்பு விவரங்கள், தகவல் பரிமாற்றங்கள், பாஜக தலைவர்களுடனான தொடர்புகள் விசாரிக்கப்பட வேண்டும்.”

இவ்வாறு அந்தப் புகாரில் பிபவ்குமார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பிபவ்குமார் மீது ஸ்வாதி மலிவால் தெரிவித்த குற்றச்சாட்டுகளை முதலில் ஆம் ஆத்மி கட்சியின் எம்பி- சஞ்சய் சிங் ஒப்புக் கொண்டிருந்தார்.

ஆம் ஆத்மி எம்பி- சஞ்சய் சிங், அமைச்சர் அதிஷி

இந்நிலையில் டெல்லி அமைச்சர் அதிஷி நேற்று அளித்த பேட்டியில், ஸ்வாதி மலிவால் தெரிவிக்கும் அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யானவை. இது பாஜகவின் சதி என தெரிவித்துள்ளார். மலிவால் விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சி 'யு-டர்ன்' அடித்திருப்பது தற்போது சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.

x