பெண்களின் முன்னேற்றம் கண்டு அஞ்சும் பிரதமர் நரேந்திர மோடி, தேர்தலில் தோல்வி பயம் காரணமாக மகளிர் இலவச விடியல் பயணத் திட்டத்தின் மீது வீண்பழி சுமத்தி இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் வட மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி, தென் மாநிலங்களான தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பெண்களுக்கு இலவச பேருந்து வசதி வழங்கப்பட்டு இருப்பதால் மெட்ரோ ரயில்களில் கூட்டம் இல்லை என கருத்து தெரிவித்திருந்தார். நாட்டில் தமிழ்நாடு, தெலங்கானா, கேரளா, கர்நாடகா, டெல்லி, பஞ்சாப் ஆகிய 6 மாநிலங்களில் பெண்களுக்கு இலவச பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் இந்த கருத்துக்கு பல்வேறு மாநில அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
எக்ஸ் தள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘தோல்வி பயம் என்ன செய்யும்? பிரதமர் என்ற உயர்பொறுப்பில் இருந்து கொண்டே ஒரு மாநில அரசின் மக்கள்நலத் திட்டத்தின் வெற்றியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் தூற்றச் செய்யும்! இந்தியர்கள் அனைவருக்கும் தான் பொதுவானவர் - பிரதமர் என்பதையே மறந்து மாநிலங்களுக்கு இடையே மோதலையும் வெறுப்பையும் தூண்டச் செய்யும்! ஜூன்-4 இந்தப் பொய்கள் உடைபடும்! வெறுப்பு அகலும்! #INDIA வெல்லும்!’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ’பத்தாண்டு கால சாதனைகள் என்று ஏதுமில்லாததால், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் மக்கள் நலத்திட்டங்களை கொச்சைப்படுத்த துணிந்திருக்கிறார் பிரதமர் மோடி. கோடிக்கணக்கான பெண்களுக்கு நாள்தோறும் நன்மை தந்து வரும் விடியல் பயணத் திட்டத்தை பகிரங்கமாக எதிர்க்கிறார். ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்திட்டு அறிமுகப்படுத்திய திட்டம், பயண சுதந்திரத்தை தந்ததோடு, பெண்களுக்கு பல வகைகளிலும் ஏற்றத்தை அளித்திருக்கிறது. பேருந்துகளில் கட்டணமில்லா பயணத்தால் மெட்ரோ ரயில்களில் கூட்டம் இல்லை என புதுப்புரளி கிளப்பி இருக்கிறார்.’
’2019ல் 3 கோடியே 28 லட்சம் பயணங்கள் என்றிருந்த சென்னை மெட்ரோ பயணங்கள் 2023ல், 9 கோடியே 11 லட்சம் ஆக உயர்ந்திருக்கிறதே தவிர, குறையவில்லை. சென்னை மெட்ரோ 2ம் கட்ட விரிவாக்கத்திற்கு நிதி தராமல் திட்டத்தையே முடக்கிய பிரதமர் மோடி, உண்மைகளை மறைத்து விடியல் திட்டத்தின் மீது வீண்பழி சுமத்தி இருக்கிறார். பிற்போக்குத்தனமான வலதுசாரி சிந்தனைகள் கொண்ட ஆர்.எஸ்.எஸ் பின்புலத்திலிருந்து வந்தவர் என்பதால், பெண்களின் முன்னேற்றம் கண்டு அஞ்சுகிறார். பாஜகவின் வகுப்புவாத கனவுகள் ஒருபோதும் பலிக்காது. பொய்மை உடைபட்டு, வெறுப்பு அகலும். இந்தியா வெல்லும்.’ என்று தெரிவித்துள்ளார்.