மம்தா பானர்ஜி குறித்து சர்ச்சை கருத்து: உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்


அபிஜித் கங்கோபாத்யாய்

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய்க்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம், தம்லுக் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுபவர் அபிஜித் கங்கோபாத்யாய். கொல்கத்தா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியான இவர், பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாஜகவில் இணைந்து தேர்தலை சந்திக்கிறார்.

இந்நிலையில் திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், அம்மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி குறித்து தரக்குறைவாக விமர்சித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார் அபிஜித் கங்கோபாத்யாய்.

மம்தா பானர்ஜி

இது தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. அந்தப் புகாரில், 'அபிஜித் கங்கோபாத்யாய், “மம்தா பானர்ஜி, நீங்கள் எவ்வளவுக்கு விற்கப்படுகிறீர்கள்? உங்கள் ரேட் ரூ.10 லட்சம்? அழகுகலை நிபுணர் மூலம் நீங்கள் மேக்கப் செய்து கொண்டீர்களா? மம்தா பானர்ஜி ஒரு பெண்ணா? நான் சில நேரங்களில் ஆச்சரியப்படுகிறேன்" என கூறியுள்ளார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில் தேர்தல் ஆணையம், கங்கோபாத்யாய் கருத்தானது, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக கண்டறிந்து அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில், 'மம்தா பானர்ஜி தொடர்பான கருத்து முறையற்ற, நியாயமற்ற, கண்ணியத்துக்கு அப்பாற்பட்டதாக உள்ளது. வார்த்தையின் ஒவ்வொரு அர்த்தத்திலும் கெட்ட நோக்கம் உள்ளது. இது தொடர்பாக வரும் 20ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும்' என குறிப்பிட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம்

மேற்கு வங்க மாநிலம், ஹால்டியாவில் கடந்த 15ம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் அபிஜித் கங்கோபாத்யாய் பேசுகையில் இந்த சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். இந்த சர்ச்சை குறித்து கங்கோபாத்யாய் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. அம்மாநில பாஜக, கங்கோபாத்யாய் பேசியதாக கூறப்படும் வீடியோ போலியானது என தெரிவித்துள்ளது.

x