அர்விந்த் கேஜ்ரிவால் இல்லத்தில் ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மலிவால் தாக்கப்பட்டதாக கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை சந்திக்க அவரது இல்லத்துக்கு அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஸ்வாதி மலிவால் கடந்த 13ம் தேதி சென்றார். அப்போது, கேஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ்குமார், ஸ்வாதி மலிவாலை தாக்கியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மூன்று நாள்களாக இந்த சம்பவம் குறித்து முதல்வர் கேஜ்ரிவால் தரப்பிலிருந்து பிபவ்குமார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாதது, ஆம் ஆத்மி கட்சிக்கு அரசியல் ரீதியாக நெருக்கடியை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், தாக்குதலுக்குள்ளான எம்.பி. ஸ்வாதி மலிவாலிடம் நேற்று போலீஸார் வாக்கு மூலம் பெற்று, பிபவ் குமார் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர் நேற்று இரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஸ்வாதிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து இன்று காலை டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்றத்தில் ஸ்வாதி மலிவால் நேரில் ஆஜராகி, தன் மீதான தாக்குதல் சம்பவம் குறித்து வாக்குமூலம் அளித்தார்.
இதற்கிடையே பிபவ்குமார் தலைமறைவாகிவிட்டதால் அவரை போலீஸார் தேடி வருகின்றனர். மேலும், டெல்லி மகளிர் ஆணையம் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியிருந்த நிலையில், பிபவ் குமார் அந்த விசாரணைக்கும் ஆஜராகவில்லை.
இச்சூழலில் சம்பவத்தன்று கேஜ்ரிவால் இல்லத்தில் ஸ்வாதி மலிவால் தாக்கப்பட்டது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
அதில் ஸ்வாதி மலிவால் ஷோபாவில் அமர்ந்திருப்பதும், அவரை சுற்றிலும் ஆண் பணியாளர்கள் இருப்பதும் பதிவாகி உள்ளன. மேலும், பிபவ் குமார், ஸ்வாதி மலிவாலை வெளியே போகும்படி கூறுவதும், அதற்கு, “நான் உங்கள் அழுத்தத்துக்கு அடிபணிய மாட்டேன்.
போலீஸாருக்கு போன் செய்துள்ளேன். நான் இங்கிருந்து போகமாட்டேன். உங்களுக்கு பாடம் கற்பிப்பேன்" என ஸ்வாதி மலிவால் கூறுவதும் கேட்கிறது.
இதைத் தொடர்ந்தே அவர் மீதான தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. எனினும் அந்த காட்சிகள் இந்த வீடியோவில் இல்லை. ஆனால், ஸ்வாதி மலிவால் தாக்கப்பட்ட வீடியோ என இது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
இதையும் வாசிக்கலாமே...
சவுக்கு சங்கர் வழக்கு... பெலிக்ஸ் ஜெரால்ட் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்!
ஓடுபாதையில் விமானம் மீது மோதிய டிரக்; உயிர் தப்பிய 180 பயணிகள்; புனேவில் பரபரப்பு!
கையில் கட்டுடன், கேன்ஸ் ரெட் கார்ப்பெட்டில் கவனம் ஈர்த்த ஐஸ்வர்யா ராய்!
பெரும்பான்மை கிடைக்கலைன்னா பாஜகவின் ‘பிளான் பி’ என்ன? - அமித் ஷா அட்டகாச பதில்!
அஞ்சலி கொலையில் திடீர் திருப்பம்... ஓடும் ரயிலிலிருந்து குதித்த குற்றவாளி!