காங்கிரஸ் கட்சி தற்போது ‘மிஷன் 50’ என்ற திட்டத்தை தொடங்கி, நடப்பு மக்களவைத் தேர்தலில் குறைந்தபட்சம் 50 இடங்களைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம், ஃபதேபூரில் பாஜக சார்பில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பங்கேற்று தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய பிரதமர் மோடி, “ஒட்டுமொத்த காங்கிரஸ் குடும்பமும் தனது முகத்தை காப்பாற்றவும், 50 இடங்களை வெல்லவும் இப்போது பாடுபட்டு வருகிறது. சைக்கிளும் (அகிலேஷ் யாதவ் கட்சி சின்னம்) பஞ்சராகி விட்டது. காங்கிரஸின் திட்டம் குறித்த உறுதியான தகவல் என்னிடம் உள்ளது.
இளவரசர் (ராகுல் காந்தி) வயநாட்டிலிருந்து ஓடிவிடுவார் என்று நான் கூறியிருந்தேன். அமேதிக்குச் செல்ல அவருக்கு தைரியம் இல்லை என்றும் நான் சொன்னேன். நான் சொன்னது சரிதான் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
இரண்டு இளவரசர்களுக்கும் (ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ்) ஒரே ஜாதகம் தான். இருவரும் சமரச அரசியலை பின்பற்றுகிறார்கள். மாஃபியாவை ஊக்குவிக்கிறார்கள். ஊழலுக்கு பாதுகாப்பு அளிக்கிறார்கள். நீங்கள் (மக்கள்) அதிக எண்ணிக்கையில் பாஜகவுக்கு வாக்களித்து உங்கள் பகுதியின் வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டும்.
இந்தியா கூட்டணி சீட்டு கட்டைப் போல் சரிந்து விழத் தொடங்கிவிட்டது. அவர்களின் தொண்டர்களும் ஏமாற்றமடைந்துள்ளனர். தற்போது அவர்களின் முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன. விடுமுறையில் வெளிநாடு செல்வதற்காக அவர்கள் ஏற்கெனவே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துள்ளனர்” என்றார்.
இதையும் வாசிக்கலாமே...