அடுத்த தலைமுறைக்கு வழிவிடாத அளவுக்கு பதவி மீது ஆசை: பிரதமர் மோடி மீது உத்தவ் தாக்கரே விளாசல்!


உத்தவ் தாக்கரே

அடுத்த தலைமுறைக்கு வழி வகுப்பதற்குப் பதிலாக பிரதமர் பதவியை மீண்டும் பெற ஆர்வமாக இருப்பதாக பிரதமர் மோடி மீது, சிவசேனா (உத்தவ் பிரிவு) தலைவர் உத்தவ் தாக்கரே விமர்சித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம், தானேவில் தற்போதைய எம்பி-யும், சிவசேனா (உத்தவ் பிரிவு) வேட்பாளருமான ராஜன் விசாரை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர் "இந்த தேர்தல் விசுவாசத்துக்கும், துரோகத்துக்கும் இடையேயான தேர்தல். பிரதமர் மோடி பிரச்சாரத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறார். பாஜக முதலில் பெரும்பான்மையை குறிப்பிட்டு பிரச்சாரம் செய்து வந்தது. தற்போது அதிலிருந்து திசை மாறி வம்சாவளி அரசியல் குறித்து பேசி வருகிறது.

பிரதமர் மோடி

அடுத்த தலைமுறைக்கு வழி வகுப்பதற்குப் பதிலாக பிரதமர் பதவியை மீண்டும் பெற மோடி ஆர்வமாக உள்ளார்” என்றார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் பிரதமர் மோடி, சமீபத்திய பிரச்சாரத்தில் உத்தவ் சிவசேனாவை ‘போலி சிவசேனா' என்றும், சரத் பவாரை 'அலைந்து திரியும் ஆன்மா' என்றும் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கு பதிலடியாக தற்போது உத்தவ் தாக்கரே, பிரதமர் மோடியை பதவி ஆசை கொண்டவர் என விமர்சித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் கடந்த 2022ம் ஆண்டில் ஏக்நாத் ஷிண்டே ஒன்றுபட்ட சிவசேனாவை உடைத்து பாஜகவுடன் கூட்டணி அமைத்து முதல்வரானார். அதன் பிறகு, நடைபெறும் தற்போதைய மக்களவைத் தேர்தல் அம்மாநிலத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சரத் பவார், ஏக்நாத் ஷிண்டே

குறிப்பாக சிவசேனாவின் உத்தவ் தாக்கரே - ஏக்நாத் ஷிண்டே ஆகியோரிடையே இந்த தேர்தல் ஒரு கவுரவப் போராக கருதப்படுகிறது.

ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா சார்பில் தானே மக்களவைத் தொகுதியில் நரேஷ் மஸ்கே போட்டியிடுகிறார். மும்பையில் உள்ள 6 தொகுதிகள் உள்பட மகாராஷ்டிராவில் 12 தொகுதிகளுக்கு வரும் 20ம் தேதி நடைபெறும் 5வது கட்டத் தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

x