முதுமலை - மாயாற்றின் குறுக்கே தாமதமாகும் பாலம் கட்டுமானப் பணி: பொதுமக்கள் அதிருப்தி


முதுமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட தெப்பக்காட்டில் மாயாற்றின் குறுக்கே கட்டப்பட்டுவரும் பாலம். | படம்: ஆர்.டி.சிவசங்கர் |

முதுமலை: முதுமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட தெப்பக்காட்டில் மாயாற்றின் குறுக்கே பாலம் கட்டுமானப் பணி தாமதமாக நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூரிலிருந்து முதுமலை புலிகள் காப்பகம் வழியாக மைசூருக்கு தேசிய நெடுஞ்சாலையும், தெப்பக்காடு வழியாக மசினகுடிக்கு சாலையும் செல்கிறது.

இதில் தெப்பக்காடு - மசினகுடி இடையே மாயாறு ஓடுகிறது. இதன் குறுக்கே ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழமையான இரும்பு பாலம் இருந்தது. இந்த பாலம் மிகவும் பழுதடைந்ததால், கனரக வாகனங்களை இயக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் புதிதாக கான்கிரீட் பாலம் கட்ட வேண்டுமென, அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.

இதைத்தொடர்ந்து, 2022 ஜனவரி மாதம் புதிய பாலம் கட்டுவதற்காக ரூ.1.85 கோடி நிதி ஒதுக்கப்பட்டதையடுத்து, ஆங்கிலேயர் கால இரும்பு பாலத்தை அகற்றும் பணி நடைபெற்றது. இதனால், முதுமலை - தெப்பக்காடு தரைப்பாலம் வழியாக மசினகுடிக்கு வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன.

பிப்ரவரி முதல் வாரம் இரும்பு பாலம் முழுமையாக அகற்றப்பட்டதால், வனத்துறைக்கு சொந்தமான தரைப்பாலம் வழியாக போக்குவரத்து திருப்பிவிடப்பட்டது. இந்நிலையில், தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழைக் காலங்களில் வெள்ளத்தால் தரைப்பாலம் மூழ்கிவிடுவதால் போக்குவரத்து தடைபடுகிறது.

மாயாறு தரைப்பாலம்தான், மசினகுடி - கூடலூர் போக்குவரத்துக்கு ஆதாரம். மழைக்காலத்தில் மாயாறு தரைப்பாலமும் முழ்கிவிடுவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. மேலும், கனரக வாகன போக்குவரத்தாலும் தரைப்பாலம் சேதமடைந்துள்ளது.

எனவே, புதிய பாலம் கட்டுமானப் பணியை விரைந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் புதிய பாலத்தை கட்டுவதற்கான பணி, இரண்டு ஆண்டுகளாக தொடங்கப்படாமல் தாமதமாகி வந்தது.

நீண்ட காலத்துக்கு பின்னர், தற்போதுதான் கட்டுமானப் பணி தொடங்கியுள்ளது. இந்நிலையில், தற்போது கோடை மழை மற்றும் தென்மேற்கு பருவ மழை தொடங்கவுள்ள நிலையில், மீண்டும் கட்டுமானப் பணி முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பொதுமக்கள் கூறும்போது, ‘‘தெப்பக்காடு இரும்பு பாலம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இடிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது.

தற்போது பாதி அளவிலான பணிகளே நிறைவடைந்துள்ளன. பருவமழைக் காலம் தொடங்கும் நிலையில், கட்டுமானப் பணி மேலும் தாமதமாகும் என தெரிகிறது. எனவே, பாலம் கட்டுமானப் பணியை விரைவில் முடிக்க நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

நெடுஞ்சாலைத் துறையினர் கூறும்போது, ‘‘பாலத்துக்கான தூண்கள் அமைக்கப்பட்டுவிட்டன. இதனால், விரைவில் பாலம் கட்டுமானப் பணிகளை முடித்து, மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்’’ என்றனர்.

x