குருத்வாராவில் சீக்கிய தலைப்பாகை அணிந்து உணவுப் பரிமாறிய பிரதமர் மோடி!


பாட்னா குருத்வாராவில் சீக்கிய தலைப்பாகை அணிந்து பக்தர்களுக்கு உணவு பரிமாறிய பிரதமர் மோடி

பீகார் மாநிலம், பாட்னாவில் உள்ள குருத்வாராவுக்குச் சென்ற பிரதமர் மோடி, சீக்கிய தலைப்பாகை அணிந்து அங்கு உணவுப் பரிமாறினார்.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் பீகார் மாநிலம் பாட்னாவுக்கு பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்துக்காக சென்றார். அங்கு ரோடு ஷோ நடத்திய அவர், இன்று காலை ஹரிமந்திர் ஜி பாட்னா சாஹிப் குருத்வாராவுக்குச் சென்று அங்குள்ள லங்கரில் (உணவுக்கூடம்) பக்தர்களுக்கு உணவு பரிமாறினார்.

அப்போது பிரதமர் மோடி சீக்கிய தலைப்பாகை அணிந்திருந்தார். இது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. உணவுப் பரிமாறியதோடு மட்டுமின்றி, லாங்கரில் உணவு சமைக்கும் பணிகளுக்கும் பிரதமர் மோடி உதவினார்.

தகாத் ஸ்ரீ ஹரிமந்திர் ஜி, பாட்னா சாஹிப் என அழைக்கப்படும் தகாத் ஸ்ரீ பாட்னா சாஹிப், சீக்கியர்களின் 5 தகாத்களில் ஒன்றாகும். இது பீகார் தலைநகர் பாட்னாவில் அமைந்துள்ளது.

மகாராஜா ரஞ்சித் சிங் 18ம் நூற்றாண்டில் குருத்வாரா மற்றும் தகாத்தை உருவாக்கினார். குரு கோவிந்த் சிங்கின் பிறந்த இடத்தைக் கொண்டாடுவதற்காக இது உருவாக்கப்பட்டது. பாட்னாவில் உள்ள புகழ்பெற்ற ஹரிமந்திர் ஜி குருத்வாராவுக்கு பிரதமர் வருகையையொட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

பாட்னா ஹரிமந்திர் ஜி குருத்வாராவில் பிரதமர் மோடி

பீகாரின் ஹாஜிபூர், முசாபர்பூர் மற்றும் சரண் ஆகிய தொகுதிகளில் பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்க உள்ளார். சீக்கிய வழிபாட்டுத் தலத்தில் பிரதமர் மோடியின் சேவை பணி தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.

x