பெலிக்ஸ் ஜெரால்டு எங்கே?! கண்டுபிடித்துத் தருமாறு மனைவி காவல்துறையில் மனு!


பெலிக்ஸ் ஜெரால்டு மனைவி ஜேன் ஆஸ்டின்

போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள யூடியூப் சேனல் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டின் மனைவி ஜேன் ஆஸ்டின், தனது கணவர் எங்கிருக்கிறார் என்று கண்டுபிடித்து தரும்படி திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வந்த பெலிக்ஸ் ஜெரால்டு மனைவி ஜேன் ஆஸ்டின்

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை கோவை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சவுக்கு சங்கர் மீது அடுத்தடுத்து புகார்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் கைது செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சவுக்கு சங்கரை பேட்டி எடுத்து ஒளிபரப்பிய ரெட் பிக்ஸ் யூ ட்யூப் சேனல் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டு மீதும் தொடர்ந்து புகார்கள் தெரிவிக்கப்பட்டது. பெலிக்ஸ் ஜெரால்டு முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அதனை ஏற்க மறுத்த சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் அநாகரிகமாக விவாதம் செய்த பெலிக்ஸ் ஜெரால்டை முதல் குற்றவாளியாக சேர்த்திருக்க வேண்டும் என்று தனது கருத்தையும் பதிவு செய்தது.

பெலிக்ஸ் ஜெரால்டு

பெலிக்ஸ் ஜெரால்டு ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் டெல்லியில் இருந்த அவரை கடந்த பத்தாம் தேதி இரவு தமிழக போலீஸார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் அவர் இன்னும் தமிழ்நாட்டுக்கு கொண்டு வரப்படாததால் அவருக்கு அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவரது மனைவி ஜேன் ஆஸ்டின் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

'கடந்த பத்தாம் தேதி இரவு அவரை அலைபேசி மூலம் அழைத்தபோது பலமுறை அவர் எடுக்கவில்லை. ஒரே ஒரு முறை மட்டும் எடுத்து, தான் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறினார். அதையடுத்து அருகில் இருந்த போலீஸ் அதிகாரியிடம் போனை கொடுத்தார். அவரிடம் எதற்காக எனது கணவரை கைது செய்திருக்கிறீர்கள்? எப்போது ஊருக்கு கொண்டு வருவீர்கள்? என்று கேட்ட போது இரவு ரயிலில் வர முடியாது, அதனால் மறுநாள் காலையில் ரயிலில் அவரை ஊருக்கு கொண்டு வருவதாக என்னிடம் தெரிவித்தனர்.

மறுநாள் காலையில் தொடர்பு கொண்டபோது காலையில் ரயிலில் டிக்கெட் கிடைக்கவில்லை என்று கூறினார்கள். அதன் பின்னர் பலமுறை அழைத்தும் அவர்கள் யாரும் அலைபேசியை எடுக்கவில்லை. எனது கணவரை எங்கே வைத்திருக்கிறார்கள்?, எங்கே கொண்டு செல்கிறார்கள்? என்னச் செய்யப் போகிறார்கள் என்பது தெரியவில்லை.

சவுக்கு சங்கரைப் போல எனது கணவரின் உயிருக்கும் போலீஸாரால் ஆபத்து ஏற்பட்டுள்ளது' என பெலிக்ஸ் ஜெரால்டுவின் மனைவி நேற்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், நேற்றிரவு திருச்சிக்கு சென்ற ஜேன் ஆஸ்டின், திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இது குறித்து புகார் ஒன்றையும் அளித்துள்ளார். திருச்சி போலீஸ் அதிகாரி வீரமணி என்பவர் தனது கணவரின் கைது குறித்து தன்னிடம் பேசிய நிலையில், திருச்சி மாவட்டத்தில் உள்ள எந்த நீதிமன்றத்திலும் தனது கணவர் ஆஜர் செய்யப்படவில்லை என்பதால் தன்னுடைய கணவர் எங்கே இருக்கிறார் என்று தெரியாத நிலையில் அவரை கண்டுபிடித்து தருமாறு அந்த புகார் மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.

x