அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை... வானிலை மையம் அறிவிப்பு!


மழை

தமிழ்நாட்டில் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மார்ச் மாதம் முதல் வெப்பநிலை மக்களை வாட்டி வதைத்து வருகிறது. அது ஏப்ரல் மாதத்தில் மேலும் கூடி வெப்ப அலை அடிக்க ஆரம்பித்தது. இதன் காரணமாக 110 டிகிரி செல்சியஸ் வரை வெயில் அடித்ததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் மே 4-ம் தேதி முதல் கத்தரி வெயில் ஆரம்பித்தது. இதனால் வெப்பம் மேலும் கூடியது. ஆனாலும், வேலூர், ஊத்தங்கரை உள்ளிட்ட இடங்களில் ஆலங்கட்டி மழையும், தருமபுரி, கோவை உள்ளிட்ட இடங்களில் கனமழையும் பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ந்தனர்.

இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் வெப்பம் தணியும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு காரணம் கிழக்கு திசையிலிருந்து கடலில் இருந்து காற்று வீசுவதாலும் அவ்வப்போது மழை பெய்வதாலும் வெப்பம் தணியும் என தெரிவித்துள்ளனர்.

மழை

இந்த நிலையில் மே 12 அல்லது 13 தேதிகளில் இலங்கை அல்லது குமரி கடலையொட்டி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகும் என சொல்லப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என தெரிவித்துள்ளனர். மேலும் இந்த மாத இறுதியில் காற்றழுத்தம் ஒன்று உருவாக வாய்ப்பு என சொல்லப்பட்டுள்ளது. அது போல் ஜூன் மாதம் தென் மேற்கு பருவமழை தொடங்கும் என்றும், இதனால் வெப்பம் குறையும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த இரண்டு நாளாக பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு காலை 10 மணி வரை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மின்னல்

அதன்படி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய 13 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

x