சவுக்கு சங்கர் உயிருக்கு கோவை மத்திய சிறையில் ஆபத்து இருப்பதாக அவரது வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்தும், அமைச்சர்கள் குறித்தும் யூடியூப்பரான சவுக்கு சங்கர் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். இதுதொடர்பாக சவுக்கு மீடியா உள்பட பல யூடியூப் சேனல்களில் பரபரப்பாக பேசி வருகிறார். இந்த நிலையில் அண்மையில், ஒரு யூடியூப் சேனலுக்கு சவுக்கு சங்கர் பேட்டியளித்தார். அதில், காவல் துறை அதிகாரிகள் குறித்தும், காவல் துறையில் பணியாற்றும் பெண் போலீஸார் குறித்தும் அவர் அவதூறாக கருத்துகளை வெளியிட்டிருந்தார்.
இதுகுறித்து கோவை சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தேனியில் தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கைது நீதிமன்றத்தின் ஆஜர்படுத்தினர். இதையடுத்து கோவை சிறையில் சவுக்கு சங்கர் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், அவரது தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன், சிறையில் சவுக்கு சங்கரை கொலை செய்ய முயற்சி நடப்பதாக பரபரப்பு புகார் ஒன்றை கிளப்பியுள்ளார்.
கடந்த சனிக்கிழமை இரவு சவுக்கு சங்கரை பத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பிளாஸ்டிக் பைப்பில் தாக்கியுள்ளதாகவும், இதில் சவுக்கு சங்கருக்கு உடல் முழுவதும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் சவுக்கு சங்கரின் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவரை சிறையில் சந்தித்த வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசையும், தவறு செய்யும் அதிகாரிகளையும் பற்றி பேசுபவர்களின் குரல்கள் நசுக்கப்படுகிறது. சிறையில் சவுக்கு சங்கரின் உயிருக்கே ஆபத்து உள்ளது. எனவே, நீதிமன்றம் தலையிட்டு அவருக்கு முறையான சிகிச்சை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.