நாளை உத்தரப்பிரதேசத்தில் மூன்றாம் கட்ட தேர்தல்: வெற்றியை தீர்மானிக்கும் யாதவர், முஸ்லிம் ஓட்டுகள்!


உத்தரப்பிரதேசம்

உத்தரப்பிரதேசத்தில் நாளை நடைபெற உள்ள மூன்றாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவில், 10 தொகுதிகளில் யாதவர், முஸ்லீம்களின் வாக்குகளே வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக மாறியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் மூன்றாம்கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. யாதவர் மற்றும் முஸ்லிம்களின் முக்கியக் களத்தின் வாக்குகள் 10 தொகுதிகளில் பதிவாக உள்ளன. கடந்த ஏப்ரல் 19 மற்றும் 26ம் தேதிகளில் மக்களவைக்கான இரண்டு கட்டத் தேர்தல்கள் முடிவடைந்தன. மீதம் உள்ள ஐந்துகட்டங்களில் நாளை மே 7ம் தேதி மூன்றாம் கட்டமாக வாக்குகள் பதிவாக உள்ளன. மொத்தம் 94 தொகுதிகளில் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் நடைபெற உள்ளன. இவற்றில் உத்தரப்பிரதேசத்தில் இடம்பெற்ற 10 தொகுதிகள், யாதவர் மற்றும் முஸ்லிம்களின் களமாகக் கருதப்படுகிறது.

தேர்தல் பிரச்சாரத்தில் மோடி, யோகி, அமித் ஷா

இந்த பத்து தொகுதிகளில் ஒபிசியின் பிரிவுகளில் பெரும்பாலனவர்களாக யாதவர்கள் இடம் பெற்றுள்ளனர். மீதம் உள்ளவர்களில் முஸ்லிம்களும் அதிகமாக உள்ளனர். இவற்றில் ஏட்டாவில் லோதி சமூகத்தினர் கணிசமாக உள்ளனர். இது கல்யாண்சிங் குடும்பத்தாரால் பாஜகவிற்கு ஆதரவாக உள்ளது. சமாஜ்வாதியிலிருந்த ராஷ்டிரிய லோக் தளம் பாஜக கூட்டணியுடன் இணைந்து விட்டது. இதன் பலன் பாஜகவிற்கு பத்து தொகுதிகளில் ஜாட் சமூகத்தினரும் கணிசமாக இருப்பது பலன் அளிக்கிறது. 2014 முதல் பாஜக இந்த பத்து தொகுதிகளில் தனது களத்தை பதித்து வைத்துள்ளது. 2014 இல் பத்தில் ஏழு மற்றும் 2019 இல் எட்டு தொகுதிகளை பாஜக வென்றிருந்தது. இதனால், யாதவர், முஸ்லிம் வாக்குகளை நம்பி அரசியல் செய்யும் சமாஜ்வாதிக்கு இந்த இரண்டாம் கட்டத்தின் 10 தொகுதிகள் மிக முக்கியமாகி விட்டன.

அகிலேஷின் மனைவி டிம்பிள்

மெயின்புரியில் முலாயமும், சம்பலில் ஷபிக்கூர் ரஹ்மானும் வென்றிருந்தனர். இந்த தேர்தலில், ஷபிக்கூரின் பேரன் ஷபிக்கூர் ரஹ்மான் புர்க் சமாஜ்வாதிக்காகப் போட்டியிடுகிறார். 10 இல் 3 தொகுதிகளில் அகிலேஷின் குடும்பத்தாரே போட்டியிடுகின்றனர். அகிலேஷின் மனைவி டிம்பிள் மெயின்புரியிலும், முலாயமின் சகோதரர் ராம் கோபால் யாதவ் மகன் அக்ஷய் யாதவ் பெரோஸாபாத்திலும் வேட்பாளர்களாக உள்ளனர். மற்றொரு சகோதரரான ஷிவ்பால் யாதவின் மகன் ஆதித்ய யாதவ், பதாயூ தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த பத்து தொகுதியிலுள்ள முஸ்லிம்களை பாஜக பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை, எனினும், யாதவர்களைக் கவர பாஜக தீவிர முயற்சி எடுத்துள்ளது. பிஹார், உபியில் ஆட்சி செய்ய யாதவர்கள் வாக்கு முக்கியம் என்பதை பாஜக உணர்ந்துள்ளது. இதை மனதில் வைத்து மத்தியப்பிரதேசத்தில் முதல்வராக மோஹன் யாதவ் அமர்த்தப்பட்டுள்ளார். இவரை யாதவர்களின் தொகுதியில் முக்கியப் பிரச்சாரகராக பாஜக களம் இறக்கி உள்ளது.

மாயாவதி

கடந்த 2019 தேர்தலில் உபியின் முன்னாள் முதல்வர் மாயாவதியின் பகுஜன் சமாஜ், சமாஜ்வாதியுடன் கூட்டணி அமைத்திருந்தது. இந்தமுறை இருவரும் பிரிந்ததும் பாஜகவிற்கு சாதகமாகப் பார்க்கப்படுகிறது. மேலும், சம்பலில் 2019 இல் காங்கிரஸ் வேட்பாளராக இருந்த ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணாம் தற்போது பாஜகவில் இணைந்து விட்டார். மாயாவதியும் தம் கட்சி சார்பில் ஐந்து யாதவர் வேட்பாளர்களை நிறுத்தியிருப்பது சமாஜ்வாதிக்கு சவாலாகி விட்டது. எனினும், இந்த பத்து தொகுதிகளில் மாயாவதி கட்சி கடந்த தேர்தலில் ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

கோவிஷீல்டு களேபரங்கள்... உயிர்காக்கும் தடுப்பூசியின் பக்கவிளைவுகள் பயமுறுத்தக் கூடியதா?

அயோத்தி கோயிலில் மீண்டும் மோடி.... தேர்தல் வெற்றிக்காக சிறப்பு வழிபாடு!

x