அயோத்தி கோயிலில் மீண்டும் மோடி.... தேர்தல் வெற்றிக்காக சிறப்பு வழிபாடு!


ராமர் கோயிலில் மோடி

உத்தரப் பிரதேசத்தில் நாளை மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் வெற்றிக்காக நேற்று மாலை பிரதமர் மோடி அயோத்தி சென்று ராமர் கோயில் சிறப்பு வழிபாடு நடத்தினார்.

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு, கடந்த ஜனவரி மாதம் 22ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு குழந்தை ராமர் சிலையை பிரதிஷ்டை செய்து பூஜைகள் செய்தார். இதில் மத்திய அமைச்சர்கள், திரைப்பிரபலங்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

அதன்பின்னர் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் தினமும் ஆயிரக்கணக்கானோர் ராமரை தரிசனம் செய்து வருகின்றனர். அதேபோல், சுற்றுலா பயணிகளும், வெளியூர் மக்களும் ராமர் கோவிலை பார்வையிட அயோத்தி வந்த வண்ணம் உள்ளனர்.

வாகனப் பிரச்சாரம் மேற்கொள்ளும் மோடி

இந்தநிலையில் ஜனவரி மாதத்திற்கு பிறகு முதல் முறையாக மீண்டும் பிரதமர் மோடி நேற்று அயோத்தியில் ராமர் கோயிலுக்கு வந்தார். தேர்தலில் வெற்றி பெற வேண்டி ராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதன்பின்னர் தேர்தல் பிரச்சார வாகன பேரணி நடத்தினார்.

உத்தரப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 2 கட்ட தேர்தல் நடைபெற்ற நிலையில் நாளை மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே நடைபெற்ற இரண்டு கட்டத் தேர்தல்களிலும் பாஜகவுக்கு பின்னடைவு இருக்கும் என்று கூறப்பட்டுள்ள நிலையில் அடுத்தகட்டத் தேர்தல்களில் பாஜகவுக்கு வெற்றி கிடைக்கவேண்டும் என்று பிரதமர் மோடி ராமரிடம் பிரார்த்தனை செய்ததாகக் கூறப்படுகிறது.

x