கர்நாடக மாநிலம் காக்வாட் தொகுதி எம்எல்ஏவான ராஜு காகே, இவர் தேர்தல் பிரச்சார களத்தில் வாக்காளர்களை மிரட்டும் தொனியில் பேசியதில் சர்ச்சைக்கு ஆளாகி உள்ளார்.
’தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யாவிடில், அப்பகுதியில் மின்சாரத்தை துண்டிப்போம்’ என்று கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ ராஜு காகே பொதுக்கூட்டம் ஒன்றில் மக்களை மிரட்டும் விதமாக பேசியது சர்ச்சையை கூட்டியுள்ளது. பெலகாவி மாவட்டத்தில் உள்ள தனது தொகுதியில், மக்களிடம் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக வருகிறது.
மேற்படி வீடியோவில் "எனக்கு சில இடங்களில் குறைவான வாக்குகளே கிடைத்தன. வெற்றிபெறும் அளவுக்கு அதிக வாக்குகள் கிடைக்காவிட்டால் உங்களுக்கான மின் இணைப்பைத் துண்டித்து விடுவோம். அப்படியெல்லாம் நடக்கக்கூடாது என்பதை நினைவில் வைத்து, அதற்கேற்ப வாக்களியுங்கள்” என அந்த வீடியோவில் காங்கிரஸ் எம்எல்ஏ கன்னட மொழியில் பேசுகிறார்.
அவர் உரையாற்றிய காக்வாட் சட்டமன்றத் தொகுதியானது, சிக்கோடி மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும். இங்கு ஏப்ரல் 26 அன்று தேர்தல் நடைபெற்றது. மாநிலத்தின் 28 தொகுதிகளில் சரிபாதி அன்று வாக்களித்தது. மீதமுள்ள தொகுதிகளுக்கு மே 7 அன்று தேர்தல் நடைபெறும். இதற்கிடையே எம்எல்ஏ ராஜு பேசிய வீடியோ என்றைக்கு பதிவு செய்யப்பட்டது என்பது தொடர்பான சரியான தகவல் வெளியாகவில்லை. ஆனபோதும் அவர் பேசிய கருத்துக்கள் அரசியல்வெளியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளன.
பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா, ’காங்கிரஸ் கட்சி வாக்காளர்களை அப்பட்டமாக அச்சுறுத்துவதாகவும், பொதுமக்களை அடிமைகள் போல நடத்துவதாகவும்’ சாடியுள்ளார். முன்னதாக கர்நாடக துணை முதல்வரான டி.கே.சிவகுமார், வீட்டுவாரிய குடியிருப்பின் வாக்காளர்களை தனது சகோதரருக்கு வாக்களிக்குமாறு மிரட்டியதாக சர்ச்சைக்கு ஆளானார். அவரைத் தொடர்ந்து எம்எல்ஏ ராஜு அடுத்த சர்ச்சையை கிளப்பி உள்ளார்.