மகாராஷ்டிரா மாநிலம், பாராமதி தொகுதியில் பவார் குடும்பத்தில் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளதால் இங்கு யார் வெற்றி பெறுவார் என தேசிய அளவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் பல அரசியல் திருப்பங்களுக்கு பெயர் பெற்றது. கடந்த 2022ம் ஆண்டு அம்மாநிலத்தில் அரசியல் மாற்றம் நிகழ்ந்தது. அப்போது, மகா விகாஸ் அகாதி கூட்டணி சார்பில் சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்தார்.
இந்நிலையில் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா இரண்டாக பிளவுபட்டு, பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தது.
அக்கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக இருந்து வருகிறார். பின்னர் சிவசேனாவைப் போலவே, தேசியவாத காங்கிரஸ் கட்சியும் இரண்டாக பிளவுபட்டு அஜித் பவார் தலைமையிலான அணி தற்போது ஆளும் மகாயுதி கூட்டணியில் இணைந்தது.
தற்போது அம்மாநிலத்தில் சிவசேனா உத்தவ், ஷிண்டே என இரண்டு பிரிவாகவும், தேசியவாத காங்கிரஸ் அஜித் பவார், சரத் சந்திர பவார் என இரண்டு பிரிவாகவும் தேசிய அளவில் பாஜக, காங்கிரஸ் என எதிர் எதிர் முகாம்களில் அங்கம் வகிக்கின்றன.
இவர்களில் ஷிண்டே சிவசேனா, அஜித் பவார் தேசியவாத காங்கிரஸுக்கு தேர்தல் ஆணையம் கட்சி, கொடி, சின்னம் அங்கீகாரம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சரத் பவாரின் பாராமதி தொகுதியில் பவார் குடும்பத்தினரிடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. இத்தொகுதி தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக கருதப்படுகிறது.
பாராமதி மக்களவை தொகுதியில் சரத் பவார் 5 முறையும், அவரது மகள் சுப்ரியா சுலே 3 முறையும் எம்பி-யாக இருந்துள்ளனர். மேலும், சரத் பவாரின் மருமகனும், அம்மாநிலத்தின் தற்போதைய துணை முதல்வருமான அஜித் பவார், பாராமதி சட்டப் பேரவைத் தொகுதியில் 7 முறை எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தற்போதைய மக்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் குடும்ப கோட்டையான பாராமதியில் சரத் பவார் அணி சார்பில் அவரது மகளும் தற்போதைய எம்பி-யுமான சுப்ரியா சுலே போட்டியிடுகிறார். இதேபோல், அஜித் பவார் அணி சார்பில் அவரது மனைவி சுனேத்ரா போட்டியிடுகிறார்.
ஒரே குடும்பத்துக்குள் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளதால் பாராமதியில் யாருக்கு வாக்களிப்பது என தெரியாமல் பாரம்பரிய தேசியவாத காங்கிரஸ் தொண்டர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர். இத்தொகுதி வரும் மே 7ம் தேதி நடைபெறும் 3ம் கட்டத் தேர்தலில் வாக்குப்பதிவை சந்திக்கிறது.
குடும்ப கோட்டையில் யார் மகுடம் சூடப் போகிறார்கள் என்பது அம்மாநிலம் மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்திய அரசியலிலும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
ஈரோடு ஸ்டிராங் ரூமில் மீண்டும் பிரச்சினை... டிஜிட்டல் திரை கோளாறால் அரசியல் கட்சியினரிடையே பரபரப்பு