“மக்களவைத் தேர்தலில் எனது பிரச்சாரத்தை தடுக்கவே தேர்தல் நெருக்கத்தில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்புகிறது” என்று குற்றம்சாட்டி உள்ளார் அரவிந்த் கேஜ்ரிவால். இது தொடர்பாக பாஜகவுக்கு எதிராக பல கேள்விகளையும் அவர் எழுப்பியுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளாரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் மீது டெல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அக்கட்சியின் இதர தலைவர்கள் பலரும் விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வரிசையில் அடுத்தடுத்த சம்மன்களுக்கு ஆஜராகாத அரவிந்த் கேஜ்ரிவாலும், கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக இன்று காலை முதலே டெல்லியில் அலையடித்து வருகிறது.
இதனிடையே தனக்கு அனுப்பப்பட்ட 3 சம்மன்களுக்கும் ஆஜராகாத அரவிந்த் கேஜ்ரிவால், அமலாக்கத்துறையின் உள்நோக்கம் தொடர்பாக பாஜகவை தாக்குவதன் மூலம் புதிய கேள்விகளை எழுப்பி உள்ளார். ”கடந்த இரு வருடங்களாக மதுபான ஊழல் வழக்கின் பெயரில் விசாரணை நடத்தி வருகிறார்கள். அப்போதெல்லாம் சம்மன் அனுப்பாது, தேர்தல் நெருக்கத்தில் அவை அனுப்பப்படுவதன் நோக்கம் என்ன? மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் நான் ஈடுபடுவதை தடுக்கும் பாஜகவின் நோக்கம் மட்டுமே இதில் வெளிப்பட்டுள்ளது.
பெரும் ஊழல் நடந்திருப்பதாக 2 வருடமாக தீவிர விசாரணை நடத்துவோர் ஏன் இதுவரை நயா பைசாவைக் கூட கண்டறியவில்லை. அவர்கள் குறிப்பிடும் ஊழல் தொகை மொத்தமும் காற்றில் கரைந்து விட்டதா? அப்படியொடு ஊழல் நடந்திருந்தால் தானே இவர்களின் விசாரணை முன்னேற முடியும்? அரசியல் காரணங்கள் அடிப்படையிலான மத்திய விசாரணை அமைப்புகளால் என்ன செய்ய முடியும்?
விசாரணை என்ற பெயரில் ஆம் ஆத்மியின் பல தலைவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு எதிராக ஆதாரம் எதையும் அவர்கள் சமர்ப்பிக்கவில்லை. கைது வரிசையில் இப்போது என்னையும் சிறையில் அடைக்கத் துடிக்கிறார்கள். இந்த கைதுகளுக்கு அப்பால் இவர்களால் துரும்பையும் நகர்த்த முடியாதது ஏன்?” என்று கேள்வி மழை பொழிந்திருக்கிறார் அரவிந்த் கேஜ்ரிவால்.
இதையும் வாசிக்கலாமே...