சேலம் அருகே பட்டாசு குடோனில் வெடி விபத்து: ஒருவர் உயிரிழப்பு, 2 பெண்கள் படுகாயம்


சேலம்: சேலம் அருகே பட்டாசு குடோனில் நடந்த வெடி விபத்தில் தொழிலாளி உயிரிழந்தார். 2 பெண்கள் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து மாவட்ட எஸ்.பி. அருண் கபிலன் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கடம்பூர் மேற்கு காடு பகுதியில் வசிப்பவர் தனசேகரன் (40). இவர் விவசாய தோட்டத்தில் பட்டாசு குடோன் வைத்து நடத்தி வருகிறார். இந்த சிறிய கட்டிடத்தில் பட்டாசு தயாரிக்கும் பணியும் நடந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று மாலை கூலமேடு கிராமத்தைச் சேர்ந்த ராஜமாணிக்கம் (45) என்பவர் பட்டாசு குடோனில் உள்ள மூலப் பொருட்களை எடுப்பதற்காக அங்குள்ள அறைக்கு சென்றார். அப்போது, எதிர்பாராத விதமாக தீ பிடித்து வெடி விபத்து ஏற்பட்டது. இதில் குடோன் முற்றிலும் சேதமடைந்தது. இதில் ராஜமாணிக்கம் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும், அங்கு பணியில் இருந்த சத்யா, விஜயா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து கெங்கவல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எஸ்பி விசாரணை: இதனிடையே விபத்து குறித்து தகவலறிந்த சேலம் மாவட்ட எஸ்.பி. அருண் கபிலன் மற்றும் ஆத்தூர் கோட்டாட்சியர், வட்டாட்சியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

பட்டாசு குடோன் உரிமையாளர் தனசேகரனிடம் நடத்திய விசாரணையில், விபத்து நடந்த கட்டிடத்தில் 6 கிலோ வெடிமருந்து இருப்பு வைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. பட்டாசு தயாரிக்கத் தேவையான மூலப்பொருட்களை எடுக்க ராஜமாணிக்கம் சென்ற போது வெடி விபத்து நடந்துள்ளது. பட்டாசு ஆலை உரிமம் கடந்த மார்ச் 31-ம் தேதி முடிவடைந்துள்ள நிலையில், உரிமம் கேட்டு புதுப்பித்துள்ளது தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.