டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் இன்று கைது?: போலீஸார் குவிப்பால் பதற்றம்!


அர்விந்த் கேஜ்ரிவால்

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் இன்று கைது செய்யப்படலாமம் என்ற தகவல் வெளியாகியுள்ளதால் அவரது வீட்டிற்கு காவல் துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக டெல்லியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அர்விந்த் கேஜ்ரிவால்

மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை கடந்த நவம்பர் 2-ம் தேதி ஆஜராகும் படி சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், அந்நாளில் அவர், மத்தியப் பிரதேச மாநிலம் சிங்ராலியில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுடன் இணைந்து பேரணி ஒன்றில் கலந்துகொண்டதால் ஆஜராகவில்லை.

இதையடுத்து, 2வது முறையாக ஆஜராக கடந்த மாதம் 21-ம் தேதி அமலாக்கத்துறை மீண்டும் அவருக்கு சம்மன் அனுப்பியது. ஆனால் அந்த சமயத்தில் 10 நாள் தியானப் பயிற்சியில் ஈடுபட இருப்பதால் விசாரணைக்கு அர்விந்த் கேஜ்ரிவால் ஆஜராக மாட்டார் என தகவல் வெளியாயானது. இந்த நிலையில் டெல்லியில் இருந்து நேற்று பிற்பகல் திடீரென அர்விந்த் கேஜ்ரிவால் பஞ்சாப் மாநிலத்திற்குப் புறப்பட்டுச் சென்றார்.

அர்விந்த் கேஜ்ரிவால்

இதனை தொடர்ந்து மூன்றாவது முறையாக நேற்று ஆஜராக அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் அமலாக்கத்துறை விசாரணைக்கு நேற்று ஆஜராக இயலவில்லை என அவர் கடிதம் அனுப்பி இருந்தார். அத்துடன், விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக உள்ளதாகவும் அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன் என்னை கைது செய்யும் நோக்கத்தோடு இருப்பதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்

இந்த நிலையில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் இன்று கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக டெல்லி மாநில ஆம் ஆத்மி அமைச்சர் ஆதிஷி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள் பக்கத்தில் நேற்று பதிவை வெளியிட்டார்.

அதில், 'நாளை (இன்று) காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கேஜ்ரிவால் வீட்டில் சோதனை நடத்த இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது' எனப் பதிவிட்டுள்ளார். அந்த பதிவு டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அர்விந்த் கேஜ்ரிவால் இன்று கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகிய நிலையில், அவரது வீட்டிற்க்கு முன்பு காவல் துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆம் ஆத்மி அலுவலகத்தில் தொண்டர்கள் அதிகளவில் குவிந்து வருவதால் அங்கும் காவல் துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக டெல்லியில் பரபரப்பு நிலவி வருகிறது.

x