மக்களவை தேர்தல் மலரும் நினைவுகள்; வாக்குச்சீட்டில் அமிதாப்புக்கு முத்தமிட்ட ரசிகைகள்... லிப்ஸ்டிக் கறையால் செல்லாமல் போன 9,000 வாக்குகள்!


1984ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அலகாபாத் தொகுதியில் போட்டியிட்ட அமிதாப் பச்சன்

கடந்த 1984-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலின் போது, அலகாபாத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அமிதாப் பச்சனுக்கு வாக்களித்த பெண்கள் வாக்குச்சீட்டில் முத்தமிட்டு வாக்குகளைச் செலுத்தினார். அதனால் வாக்குச் சீட்டுகளில் லிப்ஸ்டிக் ஒட்டி 9 ஆயிரம் வாக்குகள் செல்லாமல் போனது.

கடந்த 1984 மக்களவை தேர்தலில் நடைபெற்ற விந்தை இது. அப்போது உத்தரப்பிரதேசம் அலகாபாத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளரானார் அமிதாப்பச்சன். பாலிவுட் நடிகரான இவரது சொந்த ஊர் இந்த அலகாபாத். இவருக்கு இப்போது போல், பெண் ரசிகர்கள் அப்போதும் ஏராளம். இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் இப்போது பிரயாக்ராஜாக மாறி விட்ட அலகாபாத்தில் இன்றைக்கும் பசுமையாக உள்ளது.

அமிதாப்பிற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட ராஜீவ் காந்தி

இந்த தேர்தலில் அமிதாப்பச்சன் வென்று எம்பியானார். ஆனால், அவருக்கு விழுந்த வாக்குச்சீட்டுகளில், பல பெண்கள் முத்தமிட்டு முத்திரை குத்தி இருந்தனர். இதில் அவர்களது உதடுகளில் இருந்த லிப்ஸ்டிக் கறை வாக்குச்சீட்டில் ஒட்டியிருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர், வாக்கு எண்ணும் அதிகாரிகள்.

ஏனெனில், இந்தவகையிலான லிப்ஸ்டிக் கறைபடிந்தவை ஒன்றல்ல, இரண்டல்ல. 9,736 வாக்குச்சீட்டுகள். வேறுவழியின்றி இவை அனைத்தும் செல்லாதவைகளாக அறிவிக்கப்பட்டன. அப்படி இருந்தும் சுமார் 1 லட்சத்து 87 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார் அமிதாப்.

ராஜீவ் காந்தியுடன் அமிதாப் பச்சன்

அப்போதையக் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தி கடந்த 1983-ம் ஆண்டில் சுட்டுக்கொல்லப்பட்டார். இதன் மறு ஆண்டில் நிகழ்ந்த மக்களவை தேர்தல் அவரது மகன் ராஜீவ் காந்திக்கு பெரும் சவாலாக இருந்தது. இதில், அனுதாப அலை காங்கிரஸுக்கு சாதகமாக இருந்தது.

எனினும், ராஜீவ்காந்தி அப்போது அலகாபாத்தில் லோக் தளம் கட்சியின் ஹேமவதி நந்தன் பகுகுணாவை எப்படியும் தோற்கடிக்க விரும்பினார். உபியின் முன்னாள் முதல்வரான பகுகுணாவை எதிர்க்க, அப்போது சர்வதேச அளவில் சூப்பர் ஸ்டார் எனக் கருதப்பட்ட தம் குடும்ப நண்பர் அமிதாப்பச்சனை போட்டியிட வைத்தார்.

இந்திரா காந்தி, ராஜீவ் காந்தியுடன் அமிதாப் பச்சன்

அந்தத் தேர்தலில் திறந்த ஜீப்பில் ஊர்வலமாக சென்று தேர்தல் பிரச்சாரம் செய்தார் அமிதாப்பச்சன். அவரைக் காண இளம்பெண்கள் உள்ளிட்ட ஏராளமான ரசிகர்கள் முண்டியடித்தனர். அதன் வெளிப்பாடாக அமிதாப்பச்சன் 68.21 (2,97,461) சதவிகித வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்த சாதனை 2014 வரை எவராலும் அலகாபாத்தில் முறியடிக்கப் படவில்லை. இதில் பல வாக்குச்சீட்டுகளில் பெண்கள் தம் உதடுகளால் முத்தமிட்டிருந்ததும் பெரும் சர்ச்சையானது.

ராஜீவ், அமிதாப் ஆகியோர் சிறு வயதில் இந்திரா காந்தியுடன்

இந்த வாக்குகளை செல்லாததாக அறிவிக்கக் கூடாது என அமிதாப்பச்சனின் மனைவி ஜெயாபச்சன் ஆதரவுக் குரல் கொடுத்தார். வாக்குச் சீட்டுகளில் அமிதாப்பச்சன் பெயர் மீது முறையாக முத்திரை குத்தியவர்கள், இதர இடங்களில்தான் முத்தங்களை பதித்திருந்ததாக அவர் வாதிட்டார். இது ஏற்கப்படவில்லை என்றாலும், அந்த முத்தங்களை இட்டு அன்புகாட்டிய பெண்களுக்கு மனைவி ஜெயா நன்றிகளை தெரிவித்திருந்தார்.

அப்போது, தற்போதுள்ள வகையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் இல்லை. மாறாக, வாக்குச்சீட்டுகள் முறை நிலவியது. இந்த தேர்தலின் செய்திகளை சேகரிக்க சர்வதேச பத்திரிகையாளர்கள் பல வெளிநாடுகளிலிருந்து வந்திருந்தனர்.

அந்தத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்து ராஜீவ்காந்தி பிரதமரானார். அந்த ஆட்சியின் போது ராஜீவ் மீது விழுந்த போபார்ஸ் பீரங்கி ஊழல் சர்ச்சையில் அமிதாப்பச்சனின் பெயரும் அடிபடத் துவங்கியது. இதனால், மனம்நொந்த அமிதாப், தனது எம்பி பதவியை ஜுலை 1987-ல் ராஜினாமா செய்தார்.

x