கர்நாடகாவில் 14 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் பிரகாஷ்ராஜ், கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் ஆகியோர் தங்களது வாக்குகளை செலுத்தினர்.
கர்நாடகாவில் மொத்தம் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இன்று 14 தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது. பெங்களூர் வடக்கு, பெங்களூர் தெற்கு, மத்திய பெங்களூரு, சிக்கபள்ளாபூர், கோலார், சித்ரதுர்கா, தும்கூர், மாண்டியா, மைசூர், சாம்ராஜ்நகர், பெங்களூரு ரூரல், ஹாசன், தட்சிண கன்னடா, உடுப்பி-சிக்கபள்ளாபூர் ஆகிய 14 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கியது.
பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். பெங்களூரு நகரில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், தொழிலதிபர் இன்போசிஸ் நாராயணமூர்த்தி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் தங்களது வாக்குகளை செலுத்தினர்.
இதேபோல் நடிகர் பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோரும் தங்களது வாக்குகளை செலுத்தினர். பெங்களூரு நகரில் வசித்து வரும் முன்னணி நடிகர், நடிகைகள், முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்கள், பிரபலங்கள் ஆகியோர் தங்களது வாக்குகளை செலுத்துவதற்காக ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
தேர்தல் நடைபெறும் 14 தொகுதிகளிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். வெயில் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், காலை வேளையில் வாக்குகளை செலுத்துவதற்காக பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.