சென்னை: சங்கர நேத்ராலயா சார்பில் சங்கர ரத்னா விருது வழங்கும்விழா சென்னையில் நடந்தது. சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை சார்பாக தன்னலம் கருதாது சமூக சேவையாற்றும் தனி நபர் அல்லதுநிறுவனத்துக்கு ஆண்டுதோறும் சங்கர ரத்னா விருது வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி இவ்விருதானது முதல்முறையாக 2002-03-ம் ஆண்டில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் என்.டாடா உட்பட 10 பேருக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடப்பாண்டுக்கான சங்கர நேத்ராலயாவின் சங்கர ரத்னா விருது வழங்கும் விழா சென்னை நுங்கம்பாக்கத்தில் நேற்று முன்தினம்நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக சுகாதாரத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடிமற்றும் முன்னாள் கிரிக்கெட் விளையாட்டு வீரர் அம்பத்திராயுடு ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்வில் நடப்பாண்டுக்கான சங்கர ரத்னா விருதை சங்கர நேத்ராலயா யு.எஸ்.ஏ. அமைப்பின் தலைவர் பாலா ரெட்டி இந்தூர்த்திக்கு, ககன்தீப் சிங் பேடி வழங்கினார்.
இந்தியாவில் பிறந்து வளர்ந்த ஸ்ரீ பாலா ரெட்டிஇந்தூர்தி, 1980-களில் அமெரிக்காவில் தனது அர்ப்பணிப்பு பயணத்தை தொடங்கியவர். பள்ளி நாட்களிலேயே சமூகப்பணிகளில் ஈடுபட்டு ஆசிரியர்களிடையே பெரிதும் பாராட்டப்பட்டார். அதன் தொடர்ச்சியாக கடந்த 25 ஆண்டுகளில் அவர் வட அமெரிக்காவில் ஓர் முக்கிய சமூகத் தலைவராக இருந்து வருகிறார்.
இந்நிகழ்வில் சங்கர நேத்ராலயாவின் தலைவர் டி.எஸ்.சுரேந்திரன், மேலாண்மை வாரிய தலைவர் கிரிஷ் ஷிவாராவ், மேலாண்மை வாரியக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.