நாளை முதல் தீவிர பிரச்சாரம்.. களமிறங்குகிறார் டெல்லி முதல்வரின் மனைவி சுனிதா கேஜ்ரிவால்!


சுனிதா கேஜ்ரிவால்

டெல்லியின் மக்களவை தேர்தலுக்கானப் பிரச்சாரத்தில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா இறங்க உள்ளார். இவருடன் இணைந்து பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான் சிங்கும் டெல்லி தொகுதிகளில் பிரச்சாரம் செய்கின்றனர்.

டெல்லியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆளும் கட்சி ஆம் ஆத்மி. இதன் முதல்வரான அர்விந்த் கேஜ்ரிவால், மதுபான ஊழல் வழக்கில் சிக்கி கைதாகி உள்ளார். திஹார் சிறையில் அவர் அடைக்கப்பட்டதால் ஆம் ஆத்மியின் தேர்தல் பிரச்சாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதை சமாளிக்க முதல்வர் கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா களம் இறங்க உள்ளார். இந்த தகவலை ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்பியான சஞ்சய்சிங் வெளியிட்டுள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியின் ஏழு மக்களவை தொகுதிகளுக்கானத் தேர்தல் மூன்றாவது கட்டமாக மே 25 இல் நடைபெறுகிறது. இங்கு காங்கிரஸுடன் கூட்டணி வைத்துள்ள ஆம் ஆத்மி அக்கட்சிக்கு 3 இடங்களை ஒதுக்கி, தாம் 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இங்கு தனது கட்சியின் நான்கு வேட்பளர்களுக்காக சுனிதா கேஜ்ரிவால் நாளை ஏப்ரல் 26 முதல் பிரச்சாரம் செய்ய உள்ளார். இதை தொடர்ந்து சுனிதா, அருகிலுள்ள பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் மக்களவை தேர்தல் பிரச்சாரத்திலும் பிரச்சாரம் செய்வார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதுவரையும் தனது குடும்பத்தை மட்டும் கவனித்து வந்த சுனிதா கேஜ்ரிவால், தனது கணவர் அர்விந்த் கேஜ்ரிவாலுடன் எந்த அரசியல் மேடைகளிலும் ஏறியதில்லை. இச்சூழலில், தனது கணவர் கைதிற்கு பின் சுனிதா பொது இடங்களில் பேசி வருகிறார். முதல்வர் கேஜ்ரிவாலுக்காக ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளிலும் அவரது கைதை கண்டித்து பேசி வருகிறார். கடந்த வாரம் ஜார்கண்டில் நடைபெற்ற இண்டியா கூட்டணியின் கூட்டத்தில் சுனிதாவின் பேச்சு பலத்த வரவேற்பு பெற்றது.

சுனிதா - கல்பனா சோரன்

அர்விந்த் கேஜ்ரிவாலை போல் ஜார்கண்டின் முதல்வரான ஹேமந்த் சோரணும் கைதாகி சிறையில் உள்ளார். இந்த இருவரது கைதை கண்டித்தும் இந்தகூட்டம் நடைபெற்றது. இதில், சுனிதாவுடன், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்தின் மனைவியான கல்பனா சோரணும் கலந்து கொண்டார். இவர்கள் இருவரது மேடைப் பேச்சுக்களும் அக்கூட்டத்தில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தன. இண்டியா கூட்டணியின் உறுப்பினர்களான 28 அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இதில் பேசியிருந்தனர்.

இக்கூட்டத்தில் சுனிதா, தனது கணவருக்கு தேவையான நீரிழிவு மருந்து, ஊசிகளை தராமல் அவரை கொல்ல பாஜக முயற்சிப்பதாகப் புகார் தெரிவித்தார். எதிர்கட்சித் தலைவர்களின் குரலை ஒடுக்குவதற்காக மத்திய அரசு, அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ போன்றவற்றை ஏவி விடுவதாகத் தெரிவித்தார். இதுபோன்ற அரசுகள் தூக்கி எறியப்பட வேண்டும் எனவும் கல்பனா சோரனும் விமர்சித்தார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்ஜே, ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வீ யாதவ், சமாஜ்வாதியின் அகிலேஷ்சிங் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

x