நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு... நாட்டின் கவனம் ஈர்க்கும் நட்சத்திரத் தொகுதிகள் இவைதான்!


மதுரா பாஜக வேட்பாளர் ஹேமமாலினி - வயநாடு காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தி

2024, மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் நட்சத்திர தொகுதிகள் மற்றும் நட்சத்திர வேட்பாளர்களை இங்கே பார்ப்போம்.

மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 13 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளில் நாளை(ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த தொகுதிகளுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. வெப்ப அலை வீச்சு அதிகரித்திருக்கும் சூழலில், அவற்றால் வாக்குப்பதிவு குறையக்கூடும் என்ற கணிப்புகளுக்கு மத்தியில் இந்த நட்சத்திர தொகுதிகள் கவனம் ஈர்க்கின்றன.

ராகுல் காந்தி

வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி: கடந்த மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்த தொகுதியில் போட்டியிட்டு 4.31 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மொத்தமாக 64.94 சதவீத வாக்குகளைப் பெற்ற ராகுல், எதிர்த்துப்போட்டியிட்ட எல்டிஎஃப் வேட்பாளர் பிபி சுனீரை தோற்கடித்தார். ஆனபோதும் இந்த முறை ராகுல் காந்திக்கு அமோக வெற்றி அத்தனை எளிதாக அமைய வாய்ப்பில்லை. காரணம், சிபிஐ வேட்பாளர் ஆனி ராஜா இம்முறை ராகுலுக்கு எதிராக அங்கே களம் கண்டுள்ளார். தேசிய அளவில் அரவணைத்துப் போகும் இடதுசாரிகள் இதனால் கேரளாவில் ராகுல் காந்தியை கடுமையாக சாடி வருகின்றனர்.

மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா

கோட்டா பூண்டி தொகுதியில் ஓம் பிர்லா: மக்களவையின் தற்போதைய சபாநாயகரான ஓம் பிர்லா, 2 முறை வெற்றி கண்ட தனது ஆஸ்தான கோட்டா தொகுதியில் மீண்டும் களமிறங்கி இருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் பிரஹலாத் குஞ்சாலின் போட்டியை அங்கே ஓம் பிர்லா எதிர்கொள்கிறார். பாரம்பரிய காங்கிரஸ் கோட்டையான கோட்டா, 2014 , 2019 மக்களவைத் தேர்தல்களில் பாஜகவின் கோட்டையாக மாற்றிய பெருமை ஓம் பிர்லாவுக்கு உண்டு. மக்களவை எம்பியாக வெற்றி பெறுவதற்கு முன்னர் 2003 முதல் 2014 வரை கோட்டா தெற்கு சட்டமன்றத் தொகுதியில் வெற்றிகரமான சட்டப்பேரவை உறுப்பினராக அவர் வலம் வந்தார்.

ஹேமமாலினி

மதுரா தொகுதியில் ஹேமமாலினி: முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் மதுராவின் 2 முறை மக்களவை எம்.பி என்ற பின்னணியுடன் மீண்டும் பாஜக சார்பில் மதுராவில் களமிறங்கி இருக்கிறார் ஹேமமாலினி. காங்கிரஸ் கட்சியின் முகேஷ் தங்கரிடமிருந்து அவர் அங்கே போட்டியை எதிர்கொள்கிறார். 2019 மக்களவைத் தேர்தலில் மதுரா தொகுதியில் சுமார் 5,30,000 வாக்குகளுடன் தனது இரண்டாவது வெற்றியை ஹேமமாலினி உறுதி செய்திருந்தார். எதிர்த்துப் போட்டியிட்ட ராஷ்ட்ரிய லோக்தளத்தின் குன்வர் நரேந்திர சிங்கை 2,93,000 வாக்குகள் வித்தியாசத்தில் அப்போது வீழ்த்தினார்.

தேஜஸ்வி சூர்யா

பெங்களூரு தெற்கு தொகுதியில் தேஜஸ்வி சூர்யா:

கர்நாடக மாநிலம் பெங்களூரு தெற்கு தொகுதியின் எம்பியான தேஜஸ்வி சூர்யா மீண்டும் அங்கே போட்டியிடுகிறார். இவர் கடந்த 4 ஆண்டுகளாக பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் தேசியத் தலைவராக விளங்குகிறார். இந்த வகையில் அடுத்த தலைமுறைக்கான டெல்லி தலைவர்களில் ஒருவராக எதிர்பார்க்கப்படும் தேஜஸ்வி சூர்யா, இம்முறை காங்கிரஸ் வேட்பாளர் சௌமியா ரெட்டியை பெங்களூரு தெற்கு தொகுதியில் எதிர்கொள்கிறார். 2019 தேர்தலில், எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பி.கே.ஹரிபிரசாத்தை 3,31,192 வாக்குகள் வித்தியாசத்தில் தேஜஸ்வி தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.

சசி தரூர்

இவர்களுக்கு அப்பால் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கேரளத்தின் திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸின் சசி தரூரை எதிர்கொள்கிறார். சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கான் தொகுதியில் மாநில முன்னாள் காங்கிரஸ் முதல்வர் பூபேஷ் பாகேல் போட்டியிடுகிறார். கர்நாடக மாநிலத்தில் அதன் முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி மாண்டியா தொகுதியில் இருந்தும், கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாரின் சகோதரர் டி.கே.சுரேஷ் பெங்களூரு தொகுதியில் இருந்தும் நட்சத்திர வேட்பாளர்களாக களமிறங்குகின்றனர். ராமாயணம் தொலைக்காட்சித் தொடரில் ராமராக வலம் வந்த அருண்கோவில், பாஜகவின் கோட்டையான உபி மீரட் தொகுதியில் அக்கட்சி வேட்பாளராக போட்டியிடுகிறார்.

இதையும் வாசிக்கலாமே...

டி20 உலகக்கோப்பைக்கான பிராண்ட் அம்பாசிடராக உசைன் போல்ட் அறிவிப்பு... கொண்டாடும் ரசிகர்கள்!

துரத்தும் தோல்விகள்... பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி?

x