சென்னையில் அதிமுக பொதுக்குழு நடந்த அதே தேதியில் கோவையில் தனது ஆதரவாளர்களை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்திய ஓபிஎஸ், “அதிமுக ஆட்சியில் நடந்த தவறுகள் தொடர்பாக எனக்குத் தெரிந்த ரகசியங்களை வெளியில் சொன்னால் எடப்பாடி பழனிசாமி திஹார் சிறைக்குத்தான் போகவேண்டும்” என பொக்ரான் குண்டை வீசியிருக்கிறார்.
இதற்கு, மறுநாளே கோவை விமான நிலையத்தில் பதிலடி கொடுத்த இபிஎஸ், “ஓபிஎஸ் அவருக்குத் தெரிந்த ரகசியங்களை வெளிப்படையாகச் சொல்ல வேண்டும்” என்று சொன்னார். ஓபிஎஸ் இப்படிப் பேசியதின் பின்னணியில் உண்மையில் ரகசியங்கள் எதுவும் இருக்கிறதா... அல்லது இபிஎஸ்சை வெறுப்பேற்றவும், மிரட்டவும்தான் அப்படிப் பேசினாரா? என்ற கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் எழுந்திருக்கின்றன.
அதிமுக ஆட்சியில் தன்னை சாட்சியாக வைத்துக் கொண்டு இபிஎஸ் செய்த சில காரியங்களும் அது தொடர்பான உள் ரகசியங்களும் தனக்குத் தெரியும் என்பதால்தான் இப்படிப் பேசியிருக்கிறார் ஓபிஎஸ் என்கிறார்கள். குறிப்பாக, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு, நெடுஞ்சாலத்துறை டெண்டர் முறைகேடுகள் ஆகியவற்றின் பின்னணிகளை மனதில் வைத்துத்தான் பொறுமையின் சிகரம் ஓபிஎஸ் அப்படிப் பொங்கி இருக்கிறார் என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில்.
அதிமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் சுமார் 4,800 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்ததாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்குத் தொடர்ந்தார். இந்த முறைகேட்டின் பிரதான முகமாக இபிஎஸ் இருக்கிறார் என்பது பாரதியின் வாதம். ஆனால், அவரின் இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இந்த வழக்கின் மேல் முறையீட்டில், ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தப்படவேண்டும் என்று சொல்லி இருக்கிறது உச்ச நீதிமன்றம்.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இபிஎஸ்சுக்கு தொடர்பு இருப்பதாக வெளி ஆட்கள் தான் சொல்கிறார்களே தவிர, இந்த வழக்கில் அதுதொடர்பான நேரடியான ஆதாரங்கள் எதையும் போலீஸ் இதுவரை கைப்பற்றவில்லை. அதனால் திமுக அரசால் அவரை இந்த வழக்கில் நேரடியாக சிக்கவைக்க முடியவில்லை. இந்த நிலையில், இந்த இரண்டு வழக்குகள் தொடர்பாகவும் இபிஎஸ்சின் சில சொத்துகள் குறித்தும் தனக்குத் தெரிந்த விஷயங்களை மனதில் வைத்துத்தான், “ரகசியத்தை வெளியில் சொன்னால்...” என்று ஒபிஎஸ் மிரட்டிப் பார்க்கிறார் என்கிறார்கள்.
பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக பொதுக்குழுவில் இபிஎஸ் முழங்கிய அதே தினத்தில், “மோடியை மீண்டும் பிரதமராக்குவது என்ற லட்சியத்துடன் செயலாற்றிக் கொண்டிருக்கிறோம்” என்று சொன்ன ஓபிஎஸ், தனக்குத் தெரிந்த ரகசியங்களைச் சொல்லி பழனிசாமியை திஹார் சிறைக்கு அனுப்பவும் தன்னால் முடியும்” என்று சொன்னார்.
ஓபிஎஸ் தானாக இப்படிப் பேசவில்லை. அவரை அப்படிப் பேசவைத்திருக்கிறார்கள் என்கிறார்கள். அதிமுகவுடன் கூட்டணியைத் தொடரவேண்டும் என்பதில் பாஜக இன்னமும் திடமாக இருக்கிறது. ஆனால், இபிஎஸ் இதற்கு நேர்மாறாகப் பேசுகிறார். அவரை வழிக்குக் கொண்டுவரும் ஒரு உத்தியாகவும் கருவியாகவும் ஓபிஎஸ்சை பயன்படுத்துகிறது பாஜக.
தாங்கள் இழுத்த இழுவைக்கு இபிஎஸ் வராதபட்சத்தில் ஒரேயடியாக அவரது அரசியல் வாழ்க்கையை அஸ்தமிக்க வைக்க பாஜக தலைமை திட்டமிடுகிறது. அவர்களின் எண்ண ஓட்டத்தைப் புரிந்துகொண்டு ஓபிஎஸ்சும் இப்போது ‘ரகசியம்’ பேச ஆரம்பித்திருக்கிறார்.
"பாஜகவுடன் எங்களுக்கு உறவு சீராக இருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் பிரதமர் மோடி சிறப்பான ஆட்சியை கொடுத்திருக்கிறார். எனவே, மீண்டும் அவர் பிரதமராக வந்தால் நாடு நன்றாக இருக்கும். அந்த எண்ணத்தில்தான் செயலாற்றிக் கொண்டிருக்கிறோம். இதுதான், வரும் நாடாளுமன்ற தேர்தலில் எங்களுடைய நிலைப்பாடு” என்று ஓபிஎஸ் திடீரென திருவாய் மலர்ந்திருப்பது இதை மேலும் உறுதிப்படுத்துகிறது.
இதுகுறித்து ஓபிஎஸ்ஸின் ஆதரவாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் சுப்புரத்தினத்திடம் பேசினோம். "ஓபிஎஸ் எப்போதும் வார்த்தைகளை அளந்தும், அர்த்தம் தெரிந்தும் தான் பேசுபவர். அதனால் அவர் சொல்லியிருப்பதில் விஷயம் இருக்கிறது. காரணமில்லாமல் அப்படிச் சொல்லமாட்டார். தன்னிடமுள்ள ரகசியங்களை யாரிடம், எப்போது சொல்லவேண்டுமோ அப்போது சொல்லி இபிஎஸ்சின் மீது நடவடிக்கை எடுக்க வைப்பார்” என்றார் அவர்.
கட்சியின் ஒட்டுமொத்த அதிகாரமும் இபிஎஸ் கைக்குப் போய்விட்ட நிலையில், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் நிற்கிறார் ஓபிஎஸ். அதன் வெளிப்பாடு தான், இத்தனை நாளும் அதிர்ந்து பேசாத அவர் இப்போது அதிரடியாய் பேச ஆரம்பித்திருக்கிறார். ஓபிஎஸ் சொல்வது போல் அவரிடம் ‘ரகசியம்’ ஏதும் இருந்தால் இப்போதே சொல்லிவிட வேண்டியது தானே... இன்னும் யாருக்காக, எதற்காகக் காத்திருக்க வேண்டும்?