டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற இந்தியா கூட்டணிக் கூட்டத்தில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் இந்திப் பேச்சை மொழிபெயர்க்குமாறு திமுக எம்பி-யான டி.ஆர்.பாலு கேட்டுக் கொண்டார். இதைக் கேட்டு கொந்தளித்த நிதிஷ் குமார், ”நாம் இந்துஸ்தானில் (இந்தியா) வாழ்கிறோம். இந்தி நமது தேசியமொழி. இந்தி புரியவில்லை என்றால் கற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும்” என்று கோபப்பட்டார்.
இந்தியா கூட்டணிக்கு விதைபோட்டவர் நிதிஷ். பல்வேறு கட்சித் தலைவர்களிடமும் பேசி, ஒருங்கிணைத்து கூட்டணியின் முதல் கூட்டத்தை பாட்னாவில் வெற்றிகரமாக நடத்தியவரும் அவர்தான். நிதிஷ் அரசியல் அனுபவம் மிக்கவர். அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை. எல்லா தலைவர்களுக்கும் நெருக்கமானவர். அதனால், பிரதமர் வேட்பாளராக நிதிஷை அறிவிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு அவரது ஐக்கிய ஜனதாதளம் கட்சியினருக்கு இருந்தது.
ஆனால், இந்தியா கூட்டணிக் கூட்டத்தில் பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயின் பெயரை மேற்குவங்க மம்தா முன்மொழிய, டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் அதை வழிமொழிந்தார். அருகிலேயே சோனியா, ராகுல் அமர்ந்திருக்க பதறிப்போன கார்கே, அதை அவசரமாக மறுத்தார்.
பிரதமர் வேட்பாளராக தான் அறிவிக்கப்படாததால் ஏற்பட்ட கோபத்தைத்தான் டி.ஆர்.பாலு மீது நிதிஷ் காட்டிவிட்டார் என்கின்றன டெல்லி வட்டாரங்கள். தமிழகத்தில் ஒரு காலத்தில், ‘இந்தி தெரியாது போடா’ என டி-ஷர்ட் போட்டு முழங்கிய திமுக, ‘இந்தி தெரிஞ்சுட்டு வாடா’ என்று சொல்லாத குறையாக நிதிஷ் குமார் கொந்தளித்ததை வாய்மூடி வேடிக்கை பார்த்ததும் அரசியல்தான்.
”மொழிபெயர்க்குமாறு டி.ஆர்.பாலு கேட்டதில் என்ன தவறு? இந்தி மட்டுமே நமது தேசிய மொழி இல்லை. இந்தி பேசாதவர்கள் மீது இந்தியை திணிக்கக் கூடாது” என்று திமுகவுக்கு ஆதரவாக காங்கிரஸ் உள்ளிட்ட எந்த ஒரு கட்சியின் தலைவரும் பேசவில்லை. இது திமுகவுக்கும் அதிருப்திதான்.
பிரதமர் வேட்பாளராக நிதிஷ் அறிவிக்கப்படாததன் கோபம் பீகாரில் அவரது கூட்டணிக் கட்சியான லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதாதளத்தையும் தொற்றிக் கொண்டிருக்கிறது. ஒருவேளை, தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றிபெற்று ஆட்சி அமைத்து நிதிஷ் பிரதமராகிவிட்டால் தற்போது பீகார் துணை முதல்வராக இருக்கும் தனது மகன் தேஜஸ்வி யாதவை முதல்வராக்கி விடலாம் என்பது லாலுவின் கனவு. அதற்கு கார்கே பெயரில் முளைத்திருக்கும் முட்டுக்கட்டை லாலு கட்சியினரை கோபப்படுத்தியிருக்கிறது.
திமுக எம்பி-யான தயாநிதி மாறன் ‘‘உபி, பீகார் தொழிலாளர்கள் தமிழகத்தில் கட்டிட வேலையும் கழிப்பறை சுத்தமும் தான் செய்கிறார்கள்’’ என்று எப்போதோ பேசிய பேச்சு இந்த நேரம் பார்த்து சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாக்கப் பட்டது. அவரது பேச்சுக்கு தேஜஸ்வி யாதவ் எதிர்வினை ஆற்றியதும் இந்தியா கூட்டணி மீதான கோபத்தின் பிரதிபலிப்பு என்று கூறப்படுகிறது.
இந்தக் குழப்பங்களுக்கு நடுவே, கடந்த 25-ம் தேதி முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த நாளை முன்னிட்டு பாட்னாவில் உள்ள அவரது சிலைக்கு நிதிஷ் குமார் மலர்தூவி மரியாதை செலுத்தினார். எதற்கும் இருக்கட்டும் என்று நினைத்தாரோ என்னவோ? செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘‘வாஜ்பாய் மீது எனக்கு எப்போதுமே மரியாதை உண்டு. என்னை பீகார் முதல்வராக்கியவர் அவர்தான். எல்லோரையும் அரவணைத்துச் செல்லக் கூடியவர்’’ என்று பொடி வைத்துப் பேசினார் நிதிஷ்.
“வாஜ்பாயின் கொள்கைகளில் உங்களுக்கு உடன்பாடா?” என்று செய்தியாளர்கள் கொக்கிபோட, ‘‘வாஜ்பாய் என்னை நேசித்தார். சந்திப்புகளின்போது நான் என்ன முன்மொழிந்தாலும் அதை உடனடியாக ஏற்றுக் கொள்வார். எல்லாத் துறைகளிலும் நாங்கள் இணைந்து பணியாற்றியுள்ளோம்’’ என்று தாமரைத் தடாகத்திலும் நிதிஷ் துண்டு வீசிச் சென்றிருப்பதும் இந்தியா கூட்டணியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
கார்கேயை பிரதமர் வேட்பாளராக அறிவித்ததை நிதிஷின் ஐக்கிய ஜனதாதளம் கட்சியினரால் ஜீரணிக்கவே முடியவில்லை. அக்கட்சியைச் சேர்ந்த கோபால்பூர் தொகுதி எம்எல்ஏ-வான கோபால் மண்டல், “கார்கேயை யாருக்குமே தெரியாது” என்று ஒரேபோடாக போட்டுள்ளார். ‘‘யாரென்றே தெரியாத கார்கேயை மக்கள் ஏற்கமாட்டார்கள். சாதாரண மக்களுக்கு கார்கேயை தெரியாது. ஆனால், நிதிஷ் குமாரை நாடு முழுவதும் மக்களுக்கு நன்றாகத் தெரியும். மாநிலத் தலைவர்களை ஒருங்கிணைத்து இந்தியா கூட்டணியை உருவாக்கி அதன் அமைப்பாளராக செயல்பட்டவர் நிதிஷ்தான். அவரைத்தான் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சி நம்பகமானது அல்ல’’ என்று காங்கிரசை கோபால் மண்டல் மேலும் அதிர வைத்துள்ளார்.
போதாக்குறைக்கு நிதிஷ் கட்சி எம்பி-யான சுனில்குமார் பிண்டு “சமோசா வாங்கக் கூட காங்கிரசுக்கு நிதியில்லை” என்று கூறி கதர் பார்ட்டிகளின் கோபத்தை இன்னும் கொஞ்சம் கிளறியிருக்கிறார்.
‘‘இந்தியா கூட்டணிக் கூட்டத்தில் எந்தப் பிரச்சினை குறித்தும் தீவிரமாக விவாதிக்கவோ கூட்டணியை பலப்படுத்துவது பற்றியோ பேசவில்லை. முந்தைய இந்தியா கூட்டணி கூட்டங்களில் டீ, பிஸ்கெட்டுடன் சமோசா கொடுத்தார்கள். டெல்லியில் நடந்த கூட்டத்தில் வெறும் டீ, பிஸ்கட்டோடு நிறுத்திக் கொண்டார்கள். சமோசா கொடுக்கவில்லை. கேட்டால், காங்கிரசார் நிதி இல்லை என்கிறார்கள்.
சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கட்சிக்காக மக்களிடம் நிதி கோரியுள்ளார். 138 ஆண்டுகளை காங்கிரஸ் நிறைவுசெய்ததன் அடையாளமாக ரூ.138, ரூ. 1,380, ரூ.13,800 என்று ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த நிதியைக் கொடுக்குமாறு காங்கிரசாரையும் பொதுமக்களையும் கார்கே கோரியுள்ளார். அந்த நிதி இன்னும் வரவில்லை போலிருக்கிறது. அதுதான் சமோசா வாங்கக் கூட காங்கிரசால் முடியவில்லை’’ என்று கூட்டணிக்கு குண்டு வைத்திருக்கிறார் பிண்டு. கோபால் மண்டல், சுனில் குமார் பிண்டுகளின் பேச்சுகளை நிதிஷ் கண்டிக்காததும் வருத்தம் தெரிவிக்காததும் காங்கிரசை இன்னும் சூடாக்கி இருக்கிறது.
பாஜக ஐடி விங்கின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அமித் மால்வியாயும் தன் பங்குக்கு, ‘‘நிதிஷ்குமாரை பிரதமர் வேட்பாளராக இந்தியா கூட்டணி அறிவிக்கும்வரை அவரது கட்சி எம்பி-க்களின் இதுபோன்ற புகார்கள் தொடரும்’’ என்று எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியிருப்பது இந்தியா கூட்டணியில் எக்ஸ்ட்ரா கொந்தளிப்பை எகிற விட்டிருக்கிறது!