பெண்கள் குறித்து பேசுவதற்கு நாட்டில் ஏராளமான பிரச்சினைகள் இருக்கும் போது, பிரதமர் நரேந்திர மோடி தாலியை கேவலப்படுத்துவதை ஏற்க முடியாது என தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் ஹசினா சையத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் மாநில தலைவராக ஹசீனா சையத் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். டெல்லியில் இருந்து தமிழ்நாடு திரும்பிய அவருக்கு நேற்றிரவு சென்னை விமான நிலையத்தில் அக்கட்சியின் மகளிர் அணி நிர்வாகிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”நாட்டில் பெண்கள் குறித்து பேசுவதற்கு ஏராளமான பிரச்சினைகள் இருக்கிறது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி இந்திய பெண்களின் தாலி கலாச்சாரத்தை கேலி செய்து பேசியிருக்கிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்தியா பாரம்பரியமிக்க தேசம். இதற்கு எதிர்மறையாக பாஜக உள்ளது. பெண்களின் தாலி குறித்து பிரதமர் மோடி கேலி செய்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து பெண்களிடமும் பாஜகவின் பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் குறித்து எடுத்து சொல்லப்படும் ”என்றார்.
மேலும், ”பாஜக ஆட்சிக்கு வந்தபின் நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஏராளமாக நடந்துள்ளது. மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடந்த சம்பவங்களுக்கு பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் இதுவரை குரல் கொடுத்தது உண்டா? மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி ஆகியோர் பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் நடக்கும் போது குரல் தராதது ஏன்? ஜூன் 4ம் தேதி தேர்தல் முடிவுக்கு பின் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த உடன் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை விரைவாக செயல்படுத்த வலியுறுத்தப்படும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ”தமிழகத்தை ஒருபோதும் பாஜக ஒரு பொருட்டாக நினைத்ததில்லை. தமிழகத்திற்கான முன்னெடுப்புகளுக்கு பிரதமர் எப்போதும் ஆதரவாக இருந்ததில்லை. குறிப்பாக தென் மாநிலங்களின் வளர்ச்சிக்கு எதிராகவே பிரதமர் நரேந்திர மோடி இருந்து வந்துள்ளார். தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் இது தொடர்பான விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. மக்கள் தேர்தல்கள் மூலம் பாஜகவிற்கு தக்க பாடம் புகட்டுவார்கள். காங்கிரஸ் கட்சியில் விஜயதரணிக்கு உரிய முக்கியத்துவம் தரப்பட்டது. ஆனால் அவர் ஆசைப்படாமல் பேராசைப்பட்டார். அதற்காகவே தற்போது பாஜகவில் இணைந்துள்ளார்” என்றார்.