காங்கிரஸ் செய்த பாவங்களுக்காக நாடு தண்டிக்கிறது... பிரதமர் மோடி சாபம்!


ஜலோர் மாவட்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி

காங்கிரஸ் கட்சி செய்த பாவங்களுக்காக நாடு அக்கட்சியை தண்டித்து வருவதாக பிரதமர் மோடி பேசினார்.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு ராஜஸ்தான் மாநிலம், ஜலோர் மாவட்டத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, நேற்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

“தேர்தலில் போட்டியிட முடியாதவர்கள், தேர்தலில் வெற்றி பெற முடியாதவர்கள் களத்தை விட்டு வெளியேறிவிட்டனர். இந்த முறை அவர்கள் (சோனியா காந்தி) ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவைக்கு வந்துள்ளனர். காங்கிரஸின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.

பிரதமர் மோடிக்கு நினைவு பரிசு அளித்த பாஜக மகளிரணியினர்

முதல் கட்ட வாக்குப்பதிவில் ராஜஸ்தானின் பாதி பகுதி காங்கிரஸை தண்டித்துள்ளது. தேச பக்தி நிறைந்த ராஜஸ்தானுக்கு, காங்கிரஸால் இந்தியாவை ஒருபோதும் வலுப்படுத்த முடியாது என்பது தெரியும்.

வாரிசு அரசியல் மற்றும் ஊழலை பரப்புவதன் மூலம் காங்கிரஸ் நாட்டை காலி செய்துவிட்டது. இன்று நாடு காங்கிரஸ் மீது கோபம் கொண்டு, இந்த பாவங்களுக்காக அதை தண்டித்து வருகிறது. இளைஞர்கள் கோபமடைந்துள்ளதால் அவர்கள் மீண்டும் காங்கிரஸின் முகத்தைப் பார்க்க விரும்பவில்லை.

காங்கிரஸ் தனது தற்போதைய நிலைக்கு தன்னைத்தானே குற்றம் சாட்ட வேண்டும். ஒரு காலத்தில் 400 இடங்களை வென்ற கட்சியால் தற்போது 300 இடங்களில் கூட தனியாக போட்டியிட முடியவில்லை. இன்று காங்கிரஸின் நிலை என்னவென்றால் வேட்பாளர்களைக் கூட கண்டறிய முடியவில்லை.”

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

x