நான்கு ஆண்டுகளாக அதிமுகவை காப்பாற்றிய பாஜகவுக்கும் எடப்பாடி விசுவாசமாக இல்லை! - டிடிவி தினகரன் சாடல்


டிடிவி தினகரன்

தனி கட்சித் தொடங்கினாலும், “புரட்சித் தலைவர் தொடங்கி அம்மா அவர்களால் வளர்க்கப்பட்ட அதிமுக நிச்சயம் எங்களிடம் வந்து சேரும்” என அடிக்கடி சொல்லி வரும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அதிமுக சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு அவ்வப்போது தனது கருத்துகளை வெளிப்படையாக தெரிவித்து வருகிறார்.

அண்ணாமலை தொடர்ச்சியாக அதிமுக தலைவர்களைக் கொச்சைப்படுத்தும் விதமாக பேசிவருவதால் பாஜக கூட்டணியைவிட்டு விலகுகிறோம் எனச் சொல்லி இருக்கிறது அதிமுக. இதற்கும் கருத்துச் சொல்லி இருக்கும் தினகரன், “அதிமுக விலகலுக்கு அது காரணமல்ல... வேறு சில காரணங்கள் உள்ளன” என பற்றவைத்துள்ளார்.

இந்தநிலையில், அதிமுக – பாஜக கூட்டணி முறிவு, பாஜகவுடன் அமமுக கூட்டணி வைக்குமா உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை அவரிடத்தில் எழுப்பினோம். இனி அவரது பேட்டி...

டிடிவி தினகரன்

அதிமுக - பாஜக கூட்டணி முறிவை எப்படி பார்க்கிறீர்கள்..?

இதில் நான் என்ன கருத்துச் சொல்ல முடியும். தன்னை ஆட்சி பொறுப்பில் அமர்த்திய சின்னம்மாவுக்கே விசுவாசமாக இல்லை, தன்னோடு நான்கரை ஆண்டுகள் பயணித்த ஓபிஎஸ்ஸுக்கும் உண்மையாக இல்லை. தற்போது நான்கு ஆண்டுகளாக ஆட்சியை காப்பாற்றிய பாஜகவுக்கும் எடப்பாடி விசுவாசமாக இல்லை என்பது தெரிகிறது. இப்போதாவது அவர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள் என நினைக்கிறேன். துரோகத்தை தவிர வேறு ஒன்றும் தெரியாதவர் எடப்பாடி.

அண்ணா குறித்த அண்ணாமலையின் விமர்சனம் விலகலுக்கு காரணமில்லை என்றால்... வேறு என்னதான் காரணம்?

சில விஷயங்களை வெளிப்படையாகப் பேச முடியாது. பேரறிஞர் அண்ணா காரணமில்லை என்பது மட்டும் என்னால் கூற முடியும். மறைந்த அம்மா அவர்கள் குறித்து பேசிய பிறகு டெல்லி வரை சென்று கூட்டணியை உறுதிசெய்து வந்தவர்கள், அண்ணா குறித்து பேசியதும் கூட்டணியை முறித்துக்கொண்டோம் என கூறுவதில் உண்மையில்லை. அதையும் தாண்டிய காரணங்கள் இருக்கத்தான் செய்யும்.

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்...

பாஜக கூட்டணி வேண்டாம் என்பது அதிமுக தொண்டர்களின் முடிவு என்கிறார் ஈபிஎஸ். தொண்டர்களின் முடிவை நீங்கள் விமர்சனம் செய்யலாமா?

பாஜக - அதிமுக கூட்டணி பிரிவைப் பற்றி நான் விமர்சனம் செய்யவில்லையே. கூட்டணி முறிவுக்கு பேரறிஞர் அண்ணா குறித்த அண்ணாமலையின் விமர்சனம் தான் காரணம் என்பதைத்தான் நான் ஏற்றுக்கொள்ளவில்லை. அதைத் தாண்டியும் காரணம் இருக்கிறது என்கிறேன்; அவ்வளவுதான்.

அதிமுகவை விட்டு பிரிந்தவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என அண்ணாமலை மெனக்கிடுகிறாரே?

அது அண்ணாமலையின் விருப்பம்; இதில் நான் என்ன கருத்துக் கூற முடியும்.

அதிமுக தலைவர்கள் குறித்து அண்ணாமலையின் கருத்து ஏற்புடையதா?

பேரறிஞர் அண்ணா மற்றும் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் குறித்து அண்ணாமலை கூறிய கருத்துகள் ஏற்புடையது கிடையாது. மறைந்த தலைவர்களை விமர்சனம் செய்வதை அவர் தவிர்க்கலாம்.

மக்களவை தேர்தலில் அமமுகவின் நிலைப்பாடு..?

மக்களவைத் தேர்தல் குறித்து முடிவெடுக்க இன்னும் நாட்கள் இருக்கிறது. இந்திய திருநாட்டின் பிரதமரை தேர்ந்தெடுப்பதில் அமமுக நிச்சயம் ஒரு அணில் போலச் செயல்படும்; பொறுத்திருந்து பாருங்கள்.

அமமுகவில் இருந்து பலர் தொடர்ச்சியாக விலகக் காரணம் என்ன? இதனால் பலமிழக்கிறதா அமமுக?

அமமுக முன்பை விட மிகவும் பலமாக இருக்கிறது. வரவிருக்கும் தேர்தலில் நிச்சயம் நீங்கள் அதைப் பார்க்கத்தான் போகிறீர்கள். சுயநலத்திற்காக, சுயலாபத்திற்காக இருந்த சிலர் பிரிந்து சென்றுவிட்டார்கள்; அவ்வளவுதான்.

2026-ல் அமமுக ஆட்சி அமைக்கும் என்கிறீர்கள்... சாத்தியமா?

முயற்சித்தால் எதுவும் சாத்தியம்; பொறுத்திருந்து பாருங்கள்!

x